அரசியல்

இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்துங்கள் !

வைகோ கொண்டு வந்த தனி ஒருவர் தீர்மானம்

மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், மத்திய-மாநில உறவுகள் குறித்து தாக்கல் செய்த தனி ஒருவர் தீர்மானம் 29.11.2019 அன்று மாநிலங்கள் அவையில் விவாதத்திற்கு வந்தது, அத்தீர்மானத்தை முன்மொழிந்து வைகோ அவர்கள் 30 நிமிடங்கள் உரை ஆற்றினார். அதன் முழு விவரம் வருமாறு:-

மாநிலங்கள் அவை துணைத்தலைவர்:

உறுப்பினர் வைகோ அவர்கள் ஒரு தீர்மானத்தை முன்மொழிய இருக்கின்றார்கள். மாநில அரசுகளை வலுப்படுத்துகின்ற வகையில், இந்திய அரசியல் சட்டத்தில் முன்பு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு, பின்னர் பொதுப்பட்டியலுக்குக் கொண்டு வரப்பட்ட அதிகாரங்களை, திரும்பவும் மாநில அரசுகளுக்கே வழங்க வேண்டும் என்றும், நடுவண் அரசு மற்றும் மாநில அரசுகளின் அதிகாரப் பட்டியலில் இடம்பெறாத, எஞ்சிய அதிகாரங்கள் அனைத்தும், மாநில அரசுகளுக்கே வழங்கப்பட வேண்டும் எனவும், மக்களின் துயரங்களைப் போக்குகின்ற வகையிலான திட்டங்களை நிறைவேற்ற, மாநில அரசுகளுக்குப் போதிய நிதி ஆதாரங்கள் கிடைப்பதற்கும், இருப்பு நிதி வைத்துக் கொள்வதற்குமான வகையில் நிதி ஒதுக்கீடு தர வேண்டும் எனவும் கோரி, திரு வைகோ அவர்கள் அறிமுகம் செய்த தீர்மானத்தை முன்மொழிந்து உரை ஆற்ற  அழைக்கின்றேன்.

வைகோ: ஐயா,

கீழ்காணும் தீர்மானத்தை நான் முன்மொழிகின்றேன்:

உண்மையில்,

(1) இந்தியா என்பது, ஒரு பன்முக சமூகம்; எண்ணற்ற பண்பாட்டுப் பழக்கவழக்கங்கள், மொழிகள், சமயங்கள், கருத்துகளைக் கொண்டது; அரசியல் சட்டத்தை யாத்துத் தந்த நமது முன்னோர்கள், மக்கள் ஆட்சி நிலைப்பதற்காக கூட்டு ஆட்சியை உருவாக்கினார்கள்;

(2) பல்வேறு வகையான நிலங்களைக் கொண்ட இந்தியா, பல்வேறு சாயல்கள், வெவ்வேறு நிறங்கள் உடைய மக்களைக் கொண்டது: அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுக்க வேண்டிய காலகட்டம் இது;

(3) கடந்து வந்த ஆண்டுகளில், மாநில அரசுகளிடம் இருந்து பல்வேறு அதிகாரங்கள் பறிக்கப்பட்டு, வலு இழக்கச் செய்யப்பட்டன;

(4) நடுவண் அரசை விட, மாநில அரசுகளே மக்களை நெருங்கி இருக்கின்றன; எனவே, மக்களிடம் வெகுவாகத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, உணர்ச்சிமிக்க, முதன்மையான பொருள்கள் குறித்து, மாநில அரசுகளே கொள்கைத் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்த வேண்டும்;

(5) நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க, உண்மையான கூட்டு ஆட்சியை ஆக்குகின்ற வகையில், அரசியல் சட்டத்தின் கூறுகள் அமைய வேண்டும்;

(6) அரசியல் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட அனைத்து பணிமுறை மறு ஆய்வுக் குழுக்கள் (Review Commissions) அளித்த அறிக்கைகள் மறுஆய்வு செய்யப்பட வேண்டிய கட்டாயத் தேவை எழுந்து இருக்கின்றது;

எனவே, நடுவண் அரசு, கீழ்காணும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தத் தீர்மானம் கேட்டுக் கொள்கின்றது:

(அ) கடந்த 70 ஆண்டுகளில், மாநில அரசுகளிடம் இருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்களை, மீண்டும் மாநிலங்களுக்கே வழங்கத் தேவையான நடவடிக்கைகள்;

(ஆ) ஏழாவது அட்டவணையை மறு ஆய்வு செய்து, எஞ்சிய அதிகாரங்கள் மாநில அரசுகளிடமே இருக்கின்ற வகையில் திருத்தி எழுத வேண்டும்;

(இ) மாநில அரசுகளிடம் நிதி வளங்களைப் பெருக்குகின்ற வகையில், கூடுதல் நிதி வருவாய்க்கு வழிவகை செய்ய வேண்டும்;

(ஈ) வறட்சி, வெள்ளம், புயல் தாக்குதல் போன்ற பேரிடர்களால் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கத்தக்க வகையில், ஒவ்வொரு மாநிலமும் இருப்புத் தொகை வைத்துக் கொள்வதற்கு வழிவகை செய்ய வேண்டும்

என்பதற்காக, நான் இந்தத் தீர்மானத்தை முன்மொழிகின்றேன்.

vaiko க்கான பட முடிவு

மாண்புமிகு அவையின் துணைத்தலைவர் அவர்களே,

என் இதயத்தில் இருந்து எழுகின்ற நன்றியைக் காணிக்கை ஆக்குகின்றேன். உண்மையில், நான் மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றேன். காரணம், எந்தக் கொள்கைகளுக்காக, எங்களுடைய திராவிட இயக்கம் இதுவரை போராடி வந்திருக்கின்றதோ, அந்தக் கொள்கையை, மாநில அரசுகளுக்குக் கூடுதல் அதிகாரங்களை வழங்கி, உண்மையான கூட்டு ஆட்சியை உருவாக்கிட ஏதுவாக, நான் இந்தத் தீர்மானத்தை முன்மொழிகின்றேன்.

இந்திய அரசியல் சட்டத்தின் மைல் கல்லாகக் கருதப்படுகின்ற கூட்டு ஆட்சித் தத்துவத்தை, விரிவாகச் சொல்வதானால், நடுவண் அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையேயான உறவுகள் குறித்த மறு ஆய்வுக் கருத்துகளை இந்த அவையில் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு தீர்மானத்தை முன்மொழியக் கிடைத்த, மறக்க முடியாத வாய்ப்பிற்காக, முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கூர்த்த மதியோடு, உணர்வு ஊட்டுகின்ற வகையில், மாபெரும் தலைவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் வகுத்த கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுப் பொது வாழ்க்கையை ஏற்றுக்கொண்ட நான், மத்திய மாநில உறவுகள் குறித்து அவர் வகுத்த  கொள்கை வரையறைகளை, இந்த அவையில் எடுத்து உரைப்பதற்கு, இந்த வாய்ப்பு உதவியாக அமைகின்றது.

இந்தத் தீர்மானம், இந்திய அரசியல் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் தொகுத்து உரைக்கப்பட்டுள்ள, நடுவண் அரசு அதிகாரங்கள், மாநில அரசுகளின் அதிகாரங்கள் மற்றும் பொது அதிகாரங்கள் என்ற தலைப்பின் மீது, கூடுதல் வெளிச்சம் பாய்ச்சுகின்றது.

1965 ஆம் ஆண்டு செப்டெம்பர் 26 ஆம் நாள், பேரறிஞர் அண்ணா அவர்களை, இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஆங்கில ஏட்டின் செய்தியாளர் நேர்காணல் கண்டார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மையான கொள்கை, குறிக்கோள் என்ன? என்று கேட்டார்.

அதற்கு, அண்ணா அவர்கள் சொன்னார்கள்:

  1. இந்தியக் கூட்டு ஆட்சித் தத்துவம் மேலும் வலுப்பெறுகின்ற வகையில், இந்திய அரசியல் சட்டம் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்;
  2. மாநிலங்களுக்குத் தன்னாட்சி உரிமை;
  3. சமயச் சிறுபான்மையினருக்கு உரிய இடங்கள் கிடைப்பதற்காக,

தேர்தலில் கட்சிகள் பெறுகின்ற வாக்குகளின் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்; (விகிதாச்சார பிரதிநிதித்துவம்)

  1. சமத்துவம்
  2. சாதி ஒழிப்பு

மாநில அரசுகள், நடுவண் அரசுக்கு இணையாக, சமமாக மதிக்கப்பட வேண்டும்.

இவைதாம், எங்கள் கட்சியின் கொள்கை, குறிக்கோள்.

என்று விளக்கம் அளித்தார்.

ஐயா,

நாம் ஒருங்கிணைந்து இருக்கின்றோம். இந்திய அரசியல் சட்டம் இதுவரையிலும், 103 முறை திருத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, பெருந்தகை முனைவர் அம்பேத்கர் அவர்கள், தொலைநோக்குப் பார்வையோடு, தெளிவுபடுத்தி இருக்கின்றார். 1949 ஆம் ஆண்டு, நவம்பர் 25 ஆம் நாள், இந்திய அரசியல் சட்ட வரைவு மன்றத்தில் அவர் ஆற்றிய உரையில் இருந்து மேற்கோள் காட்ட விழைகின்றேன்:

இந்த அரசியல் சட்ட வரைவு மன்றம், கனடாவில் இருப்பதைப் போல அரசியல் சட்டத்தைத் திருத்த முடியாத வகையில் தவறு இழைக்கவில்லை;

அமெரிக்கா, ஆஸ்திரேலியா போல, அரசியல் சட்டத்தைத் திருத்துவதற்கு மிகக் கடுமையான தேவைகளை நிறைவேற்றியாக வேண்டும் என வலியுறுத்தவில்லை;

மாறாக, அரசியல் சட்டத்தைத் திருத்துவதற்கு, எளிமையான நடைமுறைகளை வகுத்து இருக்கின்றது.

அது மட்டும் அல்ல. எதிர்காலத்தில், காட்சிகள் எப்படி மாறும்? எத்தகைய நெருக்கடிகள் எழும்? என்பதை எல்லாம் அவர் முன்கூட்டியே கணித்துக் கூறி இருக்கின்றார்.

எனவே, முடிந்த முடிவாக அல்லாமல், அரசியல் சட்டத்தைத் திருத்துவது குறித்து, பல கருத்துகளை மேற்கோள் காட்டி விளக்கி இருக்கின்றார்.

அமெரிக்க அரசியல் சட்டத்தை வரைந்ததில் முதன்மையான இடம் வகித்தவர்களுள் ஒருவரான அறிஞர் ஜெபர்சன், அரசியல் சட்டங்களை வகுப்பவர்கள் தவிர்க்க முடியாத, அரிய கருத்துகளைக் கூறி இருக்கின்றார்.

ஒரு இடத்தில் அவர் சொல்கின்றார்:

ஒவ்வொரு தலைமுறையினரையும் ஒரு நாடாகத்தான் கருத வேண்டும்; பெரும்பான்மையின்படி, தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்வதற்கு, அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்; அடுத்த தலைமுறையைக் கட்டுப்படுத்துவது என்பது, அடுத்த நாட்டுக் குடிமக்களைக் கட்டுப்படுத்துவது போன்றதாகும்

என்பதை, அம்பேத்கர் எடுத்துக் கூறி இருக்கின்றார்.

அந்த வரிகளை நான் மீண்டும் கூறுகின்றேன்:

ஒவ்வொரு தலைமுறையும், ஒரு நாடுதான் என்பதை நாம் உணர வேண்டும்.

நமது அரசியல் சட்ட முகப்பு உரை இவ்வாறு குறிப்பிடுகின்றது:

நாம், இந்திய மக்கள், உறுதி கொண்டு, முறைப்படித் தீர்மானித்து, இந்தியாவை, ஓர் இறையாண்மை சமூகத்துவ, சமய சார்பு அற்ற, மக்கள் ஆட்சிக் குடியரசு ஆக, கட்டமைத்திட, மற்றும் இதன் அனைத்துக் குடிமக்களுக்கும்,

சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதி;

எண்ணம், கருத்து, பக்தி, நம்பிக்கை மற்றும் வழிபாடு தன் செயல் உரிமை;

படிநிலை மற்றும் வாய்ப்பு சமத்துவம் ஆகியனவற்றை உறுதி செய்திட;

மற்றும் தனி ஒருவருடைய கண்ணியத்தையும், நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டையும் உறுதிப்படுத்த, அனைத்து மக்களிடமும் உடன்பிறப்பு உணர்வை ஊக்குவித்திட,

இந்த 1949, நவம்பர் 26 ஆம் நாள், நம்முடைய அரசியல் சட்ட வரைவு மன்றத்தில் வரையப்பட்ட, இந்த அரசியல் அமைப்பு முறைமையை, இதன்படி ஏற்று, சட்டமாக ஆக்கி, நமக்குத் தருகின்றோம்.

நேற்று இந்த நாடாளுமன்றத்திற்குள் அல்ல, இதற்கு வெளியே, பெருந்தகை அம்பேத்கர் அவர்களுடைய சிலைக்கு வணக்கம் தெரிவித்து விட்டு, மக்கள் ஆட்சியின் மாண்பை நிலைநிறுத்துவதற்காக, கூட்டு ஆட்சிக்காக, கோரிக்கை முழக்கங்களை எழுப்பினோம்.

உண்மைக்கு எதிரான கருத்து இது. ஏனெனில், அரசியல் சட்ட வரைவு மன்றம், இந்த நாட்டு மக்களின் கருத்துகளை எதிரொலிக்கவில்லை.

இதுகுறித்து, கே.சி. வீரே என்ற அறிஞர் கூறிய கருத்துகளை இங்கே தருகின்றேன்:

இந்தியாவில், மக்கள், அரசியல் சட்ட வரைவு மன்றத்தில், அரசியல் சட்டத்தை இயற்றி இருக்கின்றார்கள். ஆனால், அந்த மன்றம் அனைத்து மக்களின் பிரதிநிதிகளாலும் தேர்ந்து எடுக்கப்பட்டது அல்ல. குறிப்பிட்ட தொகுதி வாக்காளர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டது; மேலும், அந்தச் சட்டம் மக்களுக்கு நேரடியாக வழங்கப்படவில்லை.

1733 ஆம் ஆண்டு வரையிலும், பிரித்தானியப் பேரரசில், நடுவண் அரசு என்ற அமைப்பு எதுவும் கிடையாது. வலுவான நடுவண் அரசு அமைய வேண்டும் என மக்கள் கருதினார்கள். அதுபோல, சில கட்சிகள், வலுவான நடுவண் அரசு, வலுவான இந்தியா அமைய வேண்டும் எனப் பேசுவதைக் கேட்கின்றேன். வலுவான இந்தியா என்ற கருத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். மறுமலர்ச்சி தி.மு.கழகம் ஏற்றுக்கொண்டு இருக்கின்றது. திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்றுக்கொண்டு இருக்கின்றது. அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்றுக் கொண்டு இருக்கின்றன.

ஆனால், அதே வேளையில், ஒரு கருத்தை நான் வலியுறுத்த விழைகின்றேன். எந்தவிதமான ஐயத்திற்கும் இடம் இன்றி, இந்த நாட்டின் ஒற்றுமையை, ஒருமைப்பாட்டை நாங்கள் ஏற்றுக்கொண்டு இருக்கின்றோம். இது தொடர்பான எங்களுடைய நிலைப்பாடு ஐயந்திரிபு அற்றது.

ம.தி.மு.க.வாக இருந்தாலும், தி.மு.க., திரிணமூல், தெலுகு தேசம், அகாலி தளம், தேசிய மாநாடு அல்லது வேறு எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி.

இந்தியாவை ஒற்றுமைப்படுத்துவதற்கு, பொதுவான ஒரு மொழி தேவை என்று பேசுவது எளிதாக இருக்கலாம். அதை ஆராயப் புகுவதற்கு முன்பு, இந்த அவையின் மாண்புமிகு உறுப்பினர்களை நான் கேட்டுக் கொள்வது, நீங்கள் வெறுமனே ஒற்றுமை மட்டும் வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்களா? அல்லது, ஒருமைப்பாட்டையா?

ஒரே மொழி என்ற கோட்பாட்டைக் கொண்டு, ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என்று நீங்கள் கருதுகின்றீர்களா? அத்தகைய ஒற்றுமையை ஏற்படுத்த நீங்கள் முயன்றால், அந்தக் குறிக்கோளை, நீங்கள் ஒருபோதும் அடைய முடியாது.

இதே அவையில், இந்தியத் தலைமை அமைச்சர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் சொன்னார்கள்:

இந்த நாடு, பல்வேறு இனங்களைக் கொண்டது. பல்வேறு மொழிகள்,  பழக்கவழக்கங்கள் இந்நாட்டில் நிலவுகின்றன. வேற்றுமையில்தான் ஒற்றுமை காண முடியுமே தவிர, அதன் அழகியல் கூறுகளைச் சிதைப்பதுதான் ஒற்றுமை, ஒருமைப்பாடு எனத் தவறாகக் கருதி விடக் கூடாது.

என்றார்.

vaiko க்கான பட முடிவு

சாணக்கியர் ஆக்கிய ஒரு பேரரசு இருந்தது. சந்திர குப்தரின் மௌரியப் பேரரசு, வலுவான அரசாகத் திகழ்ந்தது. ஆனால் என்ன ஆயிற்று?

அடுத்து வந்த குப்தர்களின் பேரரசை, பொற்காலம் என்றார்கள். அவர்களும் வலுவான அரசைக் கொண்டு இருந்தார்கள். அத்தகைய குப்தப் பேரரசு என்ன ஆயிற்று?

அடுத்தது மொகலாயப் பேரரசு. அவர்கள் அனைத்து அதிகாரங்களையும் தில்லியில் குவித்துக்கொண்டார்கள். என்ன நடந்தது? அந்த அரசுகள் எல்லாம் எங்கே?

எனவே, அதிகாரங்கள் அனைத்தையும் மையத்தில் குவித்துக் கொண்டால், சோவியத் ஒன்றியத்திலும், யூகோஸ்லாவியாவிலும் என்ன நிகழ்ந்ததோ, அதுதான் இந்தியாவிலும் நடக்கும்.

இங்கிலாந்து அரசியல் சட்டம் என்பது, அந்நாட்டின் அடிப்படையான மரபுகளின் வழிகாட்டுதல்களால் அமைந்தது. நான், இளங்கலை பொருளாதார வகுப்பில், ‘புதிய அரசுகள்’ என்ற தலைப்பில், ஐவர் ஜென்னிங்ஸ்அவர்களுடைய கருத்துகளைப் படித்து இருக்கின்றேன்.

அவர் கூறிய, மிகச் சுவையான ஒரு கருத்தை இங்கே தருகின்றேன்.

மரபுகளால் ஆக்கப்பட்ட இங்கிலாந்து நாட்டின் அரசியல் சட்டத்தை ஒரு குதிரைக்கு ஒப்பிடலாம். அது முன்னோக்கிப் பாய்ந்து செல்கின்ற வேளையில், அதன் தலை பின்னோக்கி வரும்

என்று அவர் சொன்னார்.

அதுபோல, மிண்டோ-மார்லே சீர்திருத்தங்கள் வந்தன; மாண்டேகு-செம்ஸ்~போர்டு சீர்திருத்தங்கள் வந்தன; அடுத்தது 1935 ஆம் ஆண்டுச் சட்டம்.

இவை நமக்குத் தந்த மரபுகளைத்தான் நாம் ஏற்றுக்கொண்டு இருக்கின்றோம்.

அமெரிக்க அரசியல் சட்டத்தின்படி, எஞ்சிய அதிகாரங்கள் அனைத்தும், மாநில அரசுகளின் அதிகாரத்தின் கீழ் அமைகின்றன. ஆஸ்திரேலியாவிலும் அப்படித்தான். ஆனால், கனடாவில் மட்டுமே, எஞ்சிய அதிகாரங்கள், நடுவண் அரசின் அதிகார வரம்பிற்குள் வருகின்றன.

நமது அரசியல் சட்டத்தில் திருத்தங்கள் வேண்டும் என்பதற்காகவே, நான் இந்தத் தீர்மானத்தை இங்கே முன்மொழிந்து இருக்கின்றேன்.

அரசியல் சட்ட அறிஞர்களுள் ஒருவரான எனது நண்பர், இங்கே அமர்ந்து இருப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.

சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்: ஆம்; நீங்கள் எடுத்து உரைக்கின்ற அறிவார்ந்த, ஊக்கம் தருகின்ற கருத்துகளை, நான் கவனத்துடன் செவிமடுத்துக் கொண்டு இருக்கின்றேன்.

வைகோ: மகிழ்ச்சி. அரசியல் சட்டத்தைத் திருத்துவதற்கான அதிகாரம் உங்களிடம்தானே அதிகாரம் இருக்கின்றது. அதனால் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.

நுழைவு எண் 97, எஞ்சிய அதிகாரங்கள். இது இப்போது நடுவண் அரசிடம் இருக்கின்றது. இதை, மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்.

கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்காகத்தான் இந்த அவை. பல்வேறு கோணங்களில் பேசுவோம்; எல்லோரும் கருத்துகளைக் கூறலாம்; பல காரணிகளை எடுத்து வைத்து, அலசி ஆராய்ந்து, சிறந்த கருத்தைத் தீர்மானிப்போம்.

கீழ்காணும் பத்து அதிகாரங்களை, பொதுப்பட்டியலில் இருந்து மாநில அரசுகளின் அதிகாரப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் எனக் கோருகின்றேன்.

நுழைவு எண் 6: வேளாண் நிலங்கள் தவிர்த்த சொத்துகள் பரிமாற்றம்; பத்திரப் பதிவு மற்றும் ஆவணங்கள்.

நுழைவு எண் 8: நிகழக்கூடிய தவறுகள். (Actionable Wrongs)

நுழைவு எண்  25 கல்வி.

நெருக்கடி நிலை என்ற இருண்ட காலத்தின்போது, நாங்கள் எல்லாம் சிறைகளில் அடைக்கப்பட்டுக் கிடந்தபோது, நடுவண் அரசு மிக எளிதாக, கல்வி என்ற அதிகாரத்தை, மாநிலங்களிடம் இருந்து பறித்துக் கொண்டது. இப்போது கல்வி, பொதுப்பட்டியலில் இருக்கின்றது.

புதிய கல்விக்கொள்கையின் தொடக்கத்தில் முதலாவது உட்பிரிவில் இருந்தே, ஒரே நாடு, ஒரே குடிமைப்பொருள் அட்டை, ஒரே ஆதார் அட்டை, ஒரே மொழி, ஒரே மதம் என்ற கருத்துகளைத் திணிக்கின்றார்கள்.

நாம் எங்கே போய்க்கொண்டு இருக்கின்றோம்?

கடைசியாக, இப்போது இருக்கின்ற நாடும் இல்லாமல் போகும் என நான் எச்சரிக்கின்றேன்.

ஒரே மொழி, ஒரே சமயம், ஒரே ஆதார் கார்டு, ஒரே உணவுப் பழக்கம் என்பதன் மூலம், நீங்கள் எதைச் சாதிக்க முயல்கின்றீர்கள்? ஜெர்மனியில் நாஜிக்களும், இத்தாலியில் பாசிஸ்டுகளும் செய்ததை, இங்கே முயற்சித்துப் பார்க்கின்றீர்களா? உங்கள் கொள்கைகளை, எங்கள் மீது திணிக்கின்றீர்கள். இது வேற்றுமையில் ஒற்றுமை காண்கின்ற நாடு. இது ஒரு பன்முக சமூகம். இது ஒரே நாடு அல்ல. இது பல்வேறு இனங்களின் நாடு. இந்தக் கருத்தை, என் நண்பர் ஏற்றுக்கொள்ள மாட்டார். சினம் கொள்ளவும் கூடும்.

சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்: இல்லை. நான் சினம் கொள்ள மாட்டேன்.

வைகோ: இந்தியா ஒரே நாடு அல்ல; இது பல்வேறு இனங்களின் நாடு.

நுழைவு எண்: 25. கல்வி, தொழிற்கல்வி, மருத்துவக் கல்வி, பல்கலைக்கழகங்கள். தொகுப்பு 1 இல், 63,64,65 மற்றும் 66. தொழிற் கல்வி, தொழிலாளர்களுக்கான தொழில் நுட்பப் பயிற்சிகள்.

இவற்றைத்தான், 42 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் பறித்துக் கொண்டீர்கள்.

நுழைவு  எண் 28 : அறக்கட்டளைகள், அறக்கட்டளைகள் நடத்தும் நிறுவனங்கள்,

நுழைவு எண் 30 : புள்ளி விவரங்கள், பிறப்பு இறப்பு பதிவு.

நுழைவு எண்: 31 நாடாளுமன்றத்தால் அறிவிக்கப்பட்ட அல்லது நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் பெருந்துறைமுகம் என அறிவிக்கப்பட்டவை அல்லாத துறைமுகங்கள்.

அதேபோல, நுழைவு எண் 40,41,42, 44. இவற்றை விளக்குவதற்கு எனக்கு நேரம் இல்லை. எனவே, நான் அடுத்த கட்டத்திற்கு வருகின்றேன்.

இந்த அதிகாரங்கள் அனைத்தும், மீண்டும் மாநில அரசுகளுக்கே வழங்கப்பட வேண்டும்.

மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கின்ற அதிகாரங்கள் யாவை? கேலிக்கு உரியவை. சொல்வதற்கே வெட்கமாக இருக்கின்றது.

நுழைவு எண் 16: குளங்கள், கால்நடைகளின் அத்துமீறல்களைத் தடுத்தல். நீங்கள் எல்லா வகையிலும் அத்துமீறுகின்றீர்கள். ஆனால், கால்நடைகளின் அத்துமீறல்களைத் தடுக்கின்ற அதிகாரங்களை மட்டும், மாநில அரசுக்கு வழங்கி இருக்கின்றீர்கள்.

நுழைவு எண் 28 சந்தைகள் மற்றும் அவற்றிற்கான கட்டணங்கள், அடுத்தது புதையல், பந்தயங்கள் மற்றும் பணம் வைத்துச் சூதாடுதல்.

அடுத்த மிகப்பெரிய அதிகாரம் என்ன தெரியுமா? இடுகாடுகள் மற்றும் சுடுகாடுகள்.

ஆம்: கூட்டு ஆட்சித் தத்துவத்தை, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையை நீங்கள் குழிதோண்டிப் புதைக்கப் போகின்றீர்கள். அதற்காகத்தான், இடுகாடுகள் மற்றும் சுடுகாடுகளின் அதிகாரங்கள் மாநிலங்களுக்கு வழங்கி இருக்கின்றீர்கள்.

இந்த இடத்தில், பேரறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிட்டதை, இங்கே சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகின்றேன்.

1969 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் நாள், ஹோம் ரூல் என்ற, தனது கட்சியின் ஆங்கில ஏட்டில், அவர் இறப்பதற்கு 20 நாள்களுக்கு முன்பு எழுதினார்:

தம்பி,

நான் எப்படிப்பட்டவன் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். நான் ஒருபோதும் பதவிகளைக் கருதிச் செயல்படுகின்றவன் அல்ல; (அலைகிறவன் அல்ல) கூட்டு ஆட்சி என காகிதத்தில் மட்டும் எழுதப்பட்ட ஒரு அரசியல் சட்டத்தின்படி அமைந்த, உண்மையில் அதிகாரங்கள் அனைத்தும் மைய அரசில் குவிந்து கிடக்கின்ற நிலையில், ஒரு மாநிலத்தில் முதல் அமைச்சர் என்கின்ற பதவியில் இருப்பதில் மகிழ்ச்சி அடைபவனும் அல்ல.

இப்போது நடைமுறையில் இருக்கின்ற அரசியல் சட்டம், கொல்லைப்புற வழியான ஒரு இரட்டை ஆட்சிதான் என்பதை, மக்களுக்கு உணர்த்துவதற்காகவே, அந்த அரசியல் கடமையைச் செய்வதற்காகவே, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருக்கின்றது.

என்று சொன்னார்.

1949 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் நாள், இந்திய அரசியல் சட்ட வரைவு மன்றத்தில், மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வருவது குறித்து, சுவையான கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன. அப்போது, பெருந்தகை முனைவர் அம்பேத்கர் அவர்கள் வேதனையுடன் குறிப்பிட்ட ஒரு கருத்தை இங்கே கூறுவது பொருத்தமாக இருக்கும்.

அவர் சொன்னார்:

என் கருத்தை ஒப்புக் கொள்வீர்கள் என நான் கருதுகின்றேன்; நமது அரசியல் சட்டத்தில் பெரும்பான்மையான பிரிவுகள், மாநிலங்களின் அதிகாரங்களை நடுவண் அரசு மீறுகின்ற வகையிலேயே அமைந்து இருக்கின்றன; இது ஒரு கூட்டு ஆட்சி அரசு அமைப்புச் சட்டம் என்று நாம் கூறுவதன் பொருள், அரசியல் சட்டம் வழங்கியுள்ள அதிகாரங்களை, மாநிலங்கள் தங்கள் நில எல்லைக்குள் செயல்படுத்துகின்ற இறையாண்மை கொண்டது என்றும், அதேபோல நடுவண் அரசு தங்களுடைய அதிகார வரம்பிற்குள் இறையாண்மை கொண்டது என்பதும் ஆகும்.

அரசியல் சட்ட வரைவு மன்றத்தில் நிகழ்ந்த கருத்துப் பரிமாற்றங்களின் நிறைவாக, 1949  நவம்பர் 25 ஆம் நாள், பெருந்தகை முனைவர் அம்பேத்கர் அவர்கள் விளக்க உரை ஆற்றினார்.

அப்போது அவர் குறிப்பிடுகின்றார்:

நடுவண் அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையிலான உறவுகளை வரையறுக்கும்போது, எத்தகைய அடிப்படைக் கொள்கைகளின் மீது, இந்தச் சட்டம் எழுதப்படுகின்றது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கூட்டு ஆட்சியின் அடிப்படையில், நடுவண் அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையிலான அதிகாரங்களை முடிவு செய்கின்ற சட்டங்களை இயற்றுவதற்கான அதிகாரம் நடுவண் அரசுக்கு அல்ல, அது இந்த அமைப்பிற்கு உரியதாகும். அந்தக் கடமையைத்தான் அரசியல் சட்டம் நிறைவேற்றுகின்றது.

சட்டங்களை இயற்றுவதற்கும், நிறைவேற்றுவதற்கும், மாநில அரசுகள், நடுவண் அரசைச் சார்ந்து இருக்க வேண்டிய தேவை இல்லை.

இது தொடர்பாக, நடுவண் அரசும், மாநில அரசுகளும் இணையான அதிகாரங்கள் கொண்டவைதான்.

மையப்படுத்தப்பட்டது என்று எப்படிக் கூற முடியும்?  (It is difficult to see how such a constitution can be  called Centralism)

வேண்டுமானால், வேறு எந்த கூட்டு ஆட்சி அரசியல் சட்டங்களிலும் இல்லாத அளவிற்கு, இந்திய நடுவண் அரசின் இயங்குதளம் மிக விரிவானதாக இருக்கின்றது என்று சொல்லலாம். எஞ்சிய அதிகாரங்களை நடுவண் அரசுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது ; மாநில அரசுகளுக்கு வழங்கப்படவில்லை. இத்தகைய கூறுகள், ஒரு கூட்டு ஆட்சிக் கொள்கையில் அடிப்படையில் அமையவில்லை.

என்று அவர் கூறினார்.

மேலும் அவர், கூட்டு ஆட்சியின் முதன்மை அடையாளம் என்பது, சட்டம் இயற்றுகின்ற, அதைச் செயற்படுத்துகின்ற அதிகாரங்களை, நடுவண் அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் பிரித்துக் கொடுப்பதே ஆகும். இதுவே, அரசியல் சட்டத்தின் உள்அடக்கக் குறிக்கோள் ஆகும் என்றும் சொன்னார்.

அறிஞர் அண்ணா அவர்கள் மாநிலங்கள் அவையில்,

தமிழ் என்ற பழமையான மொழிக்குச் சொந்தக்காரன் என்பதை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். எந்த மொழியில் என்னுடைய மூதாதையர்கள் பேசினார்களோ, அறிவார்ந்த பொன்மொழிகளையும், இலக்கியங்களையும் படைத்தார்களோ, அந்த என் தாய் மொழியாம் தமிழ், இந்திய ஒன்றியத்தின் ஆட்சி மொழிகளுள் ஒன்றாக ஆகும் வரை  நான் மனநிறைவு அடைய மாட்டேன்

என்று சொன்னார்.

இந்த அடிப்படையில், ஒரு மாநிலத்தில் இறையாண்மை குறித்து அண்ணா கூறியதை, இங்கே குறிப்பிட விழைகின்றேன்.

இந்திய அரசியல் சட்டத்தின் முகப்பு உரை, அரசியல் இறையாண்மை என்பது மக்கள் கைகளில்தான் எனத் தெளிவாகக் கூறுகின்றது.

அடுத்து, சட்ட இறையாண்மை என்பது, கூட்டுஆட்சி மற்றும் அதன் உறுப்புகளுக்கு இடையே பிரித்துக் கொள்ளப்படுகின்றது.

 

இதை ஏன் நீங்கள் கவனத்தில் கொள்ளக் கூடாது?

இறையாண்மை என்பது, ஒட்டுமொத்தமாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே குவிந்து இருக்க முடியாது.

நாம் ஒரு கூட்டு அமைப்பைப் கொண்டு இருக்கின்றோம். அரசியல் சட்டத்தை யாத்த நமது முன்னோர்கள், கூட்டு ஆட்சியைத்தான் விழைந்தார்களே தவிர, ஒற்றை ஆட்சியை அல்ல.

இந்தியா என்பது ஒரு நாடு அல்ல;உண்மையில் இது ஒரு துணைக்கண்டம் என்பதை எத்தனையோ அரசியல் அறிஞர்கள் குறிப்பிட்டு இருக்கின்றார்கள். மாறுபட்ட கருத்துகள், வேறுபட்ட பண்பாட்டுப் பழக்கவழக்கங்கள், வரலாற்றுப் பின்புலங்கள் இருக்கின்ற நிலையில், இரும்பால் அடித்த ஒற்றை ஆட்சி முறை இங்கே அமைய முடியாது.

என்றார்.

மீண்டும் பெருந்தகை முனைவர் அம்பேத்கர் அவர்கள் கூறிய ஒரு கருத்தை மேற்கோள் காட்ட விழைகின்றேன்:

நான் என்ன கூற விரும்புகிறேன் என்றால், கூட்டு ஆட்சியை நடைமுறைப்படுத்துகின்ற வேளையில், மாநிலங்கள் மேலும் மேலும் வெறுப்பு அடைந்து வருகின்றன; எனவே, அரசியல் சட்டத்தை, நடுவண் அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என மாநிலங்கள் கருதுகின்றன; அத்தகைய, அரசியல் சட்ட மறு ஆய்வுக் குழு அமைய வேண்டும்; தேவையான மாறுதல்களை மேற்கொள்ள வேண்டும்

என்றார்.

மாநிலங்களுக்கு இடையே அதிகாரங்களைப் பகிர்ந்து அளிப்பது குறித்து, இன்னும் எவ்வளவோ பேச வேண்டும் எனக் கருதினாலும், நேரம் இன்மையால் தவிர்க்கின்றேன்.

திராவிட முன்னேற்றக் கழக அரசு, இராஜமன்னார் குழுவை அமைத்தது. பேரறிஞர் அண்ணா அவர்கள் இயற்கை எய்தியபிறகு, டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள், தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பு ஏற்றார்கள். அதன்பிறகு, முதன்முறையாக அவர் தில்லிக்கு வந்தபோது, செய்தியாளர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டார்கள். அவரை எளிதில் மடக்க முடியாது என்பதை அவர்கள் அறிவார்கள்.

நடுவண் அரசுடன் உங்களுடைய உறவுகள் எப்படி இருக்கும்? என அவர்கள் கேட்டார்கள்.

அவர் உடனே சொன்னார்: இந்த தில்லியில் நான் சொல்கிறேன்; நடுவண் அரசுக்கும், மாநிலங்களுக்கும் இடையிலான உறவுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஆராய, நீதிபதிகள், கல்வியாளர்களைக் கொண்ட ஒரு குழுவை நான் அமைக்கப் போகிறேன் என்று அறிவித்தார்.

அதன்படி, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டாக்டர் பி.வி. இராஜமன்னார் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார். நீதிபதி சந்திரா ரெட்டி, சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஏ. லெட்சுமணசுவாமி முதலியார் ஆகியோர் அதன் உறுப்பினர்களாக இடம் பெற்றார்கள்.

1969 ஆம் ஆண்டு, அந்தக் குழு தன் அறிக்கையை வழங்கியது.

ஆனால், தமிழகச் சட்டமன்றத்தில் 1974 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் நாள், ஒரு தீர்மானம் முன்மொழியப்பட்டது. ஏப்ரல் 20 ஆம் நாள் நிறைவேற்றப்பட்டது.

நீதிபதி சர்க்காரியா ஆணையம், மாநிலங்களின் ஆளுநர்கள், தங்களை நடுவண் அரசின் முகவராகக் கருதிச் செயல்படக் கூடாது; மாறாக, அந்த மாநில அரசியல் சட்டப் பாதுகாப்பாளராக, தலைமையாகத் தம்மைக் கருத வேண்டும்;

வேறு வழி எதுவும் இல்லாத நிலையில், குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பரிந்து உரைப்பதற்கு முன்பு, சட்டப்பேரவையில் பெரும்பான்மையைக் காட்டக்கூடிய ஒரு புதிய அரசை அமைப்பதற்காக, அவர் தம்மால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்;

குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பரிந்து உரைப்பதற்கு முன்பு, அதுகுறித்து, ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள், மாநிலச் சட்டமன்றத்தின் கருத்தை அறிய (கேட்க) வேண்டும்.

ராஜமன்னார் குழு அறிக்கையின் பரிந்துரைகள், மாநிலங்களின் தன்னாட்சி உரிமையை வலியுறுத்துகின்றன; குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வருவதற்கு, பல கட்டுப்பாடுகளைப் பரிந்துரைக்கின்றன.

மராட்டியத்தில் என்ன நடந்தது? ஓர் இரவு நாடகம். அந்த நிழல் உலகத்தில், அந்த இரவில் என்ன நடந்தது? எனக்குத் தெரியாது. அடுத்த இரண்டு இரவுகளுக்குள், நிலைமை மாறிவிட்டது. அலாவுதீனின் அற்புத விளக்கு போல, காட்சிகள் மாறிவிட்டன. அடுத்து, நான் அனந்தபூர் சாகிப் தீர்மானத்தைப் பற்றிக் கூற விரும்புகின்றேன்.

டாக்டர் விகாஸ்மகாத்மே:

ஐயா, மராட்டியத்தின் நிழல் உலகம் குறித்து, வைகோ கூறிய கருத்துகளை, அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.

vaiko க்கான பட முடிவு

அவை துணைத்தலைவர்: அதை நான் ஆய்வு செய்கிறேன்.

வைகோ: 1978 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அகாலிதளம் கட்சியின் மாநாட்டில், அனந்தப்பூர் சாகிப் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நடுவண் அரசு, பல்வேறு வகையான மொழிக் குடும்பங்கள், பண்பாட்டுக் குழுமங்கள், சமயச் சிறுபான்மையினர் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் விருப்பங்களை மதித்து, இந்த நாட்டின் ஒற்றுமை சிதைந்து விடாதவாறு பாதுகாப்பதற்காக, அரசியல் சட்டத்தை, உண்மையான பொருள் பொதிந்ததாகத் திருத்தி எழுத வேண்டும் என அந்தத் தீர்மானம் கோருகின்றது.

(மராட்டிய நிழல் உலகம் குறித்த வைகோவின் கருத்துகளை, அவைக்குறிப்பில் இருந்து நீக்கும்படி, அவை துணைத்தலைவர் உத்தரவு)

வைகோ: நடுவண் அரசுக்கும், மாநிலங்களுக்கும் இடையேயான உறவுகளை மறுசீரமைப்பது குறித்து, 1977 ஆம் ஆண்டு, இடது முன்னணி அரசு, 15 கூறுகள் கொண்ட ஒரு திட்டத்தை வரைந்தது.  2004,2005 ஆம் ஆண்டுகளில், கொல்கத்தாவில் மீண்டும் பேசப்பட்டது.

மேலும் பல கட்சிகள், நடுவண் அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையேயான உறவுகளை சீரமைக்க வேண்டும் எனவும், மாநிலங்களுக்குக் கூடுதல் தன்னாட்சி உரிமைகளை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றன.

1983 ஆம் ஆண்டு, ஸ்ரீ நகரில் தேசிய மாநாட்டுக் கட்சி நடத்திய மாநாட்டில், திராவிட முன்னேற்றக் கழகம், தெலுகு தேசம், அகாலிதளம், இந்திய குடியரசுக் கட்சி, அஸ்ஸாம் ஜதியபாடி தளம் ஆகிய கட்சிகள் பங்கேற்றன. பல்வேறு பிரச்சினைகள் குறித்து, கருத்துகளைப் பரிமாறிக் கொண்டார்கள்.

தற்போது வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டு இருக்கின்ற டாக்டர் ~பரூக் அப்துல்லா அவர்கள் நடத்திய இரண்டு மாநாடுகளில் நான் பங்கேற்று இருக்கின்றேன்.

அந்தத் தீர்மானங்கள் குறித்து விளக்க நேரம் இல்லை. கொல்கத்தா தீர்மானம், அனந்தப்பூர் சாகேப் தீர்மானம், ராஜமன்னார் குழு பரிந்துரைகள், அதன் மீதான தமிழக சட்டமன்றத் தீர்மானம், சர்காரியா ஆணையம் அறிக்கை ஆகியவை, மிக மிக முதன்மையான நிகழ்வுகள் ஆகும்.

பல நண்பர்கள், இந்தத் தீர்மானத்தின் மீது தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க விருப்பம் தெரிவித்து இருக்கின்றார்கள். இன்னும் அரை மணி நேரம் கூட நான் பேசலாம். ஆனால், அவர்களுள் பலர், இன்று தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டும்.

எனவே, இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றித் தாருங்கள். எஞ்சிய அதிகாரங்கள் அனைத்தும் மாநிலங்களுக்கே வழங்கப்பட வேண்டும்; ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும்.

நன்றி.

அவை துணைத்தலைவர்: திரு வைகோ அவர்களே, நன்றி. இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதம், டிசம்பர் 13 ஆம் நாள் வெள்ளிக்கிழமை தொடரும்.

 

Show More

Related News

Back to top button
Close