சிறப்பு கட்டுரை

விவேகத்தின் பிறந்தநாள் – தேசிய இளைஞர்கள் தினம்

துடிப்புமிக்க நூறு இளைஞர்களை தாருங்கள், இந்தியாவையே மாற்றி காட்டுகிறேன் எனக் கூறியவர் சுவாமி விவேகானந்தர், இளைஞர்களின்  தேசப்பற்றை துடிக்கவைத்த அவரது பிறந்த தினம்தான் தேசிய இளைஞர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. துடிப்பான இளைஞர்கள் எத்தைகைய சவால்களையும் சந்திக்கக் கூடியவர்கள். இரும்பு போன்ற திடத்தையும், எஃகு போன்ற கூர்மையான நரம்பினை கொண்டவனாக இளைஞன் இருக்க வேண்டும். விடாமுயற்சி, பொறுமை, தூய்மை இம்மூன்றும் ஒவ்வொரு இளைஞனின் தாரக மந்திரமாக இருக்க வேண்டும் என விரும்பியவர் சுவாமி விவேகானந்தர்.

விஞ்ஞானம், அறிவியல், விளையாட்டு என அனைத்திலும் மற்ற நாட்டு இளைஞர்களைவிட, நமது இளைஞர்கள் அறிவாற்றல் மிக்கவர்கள் என்பதை உணர்ந்திருந்தவர் விவேகானந்தர். இளைஞர்களே இந்தியாவின் விடியல், எதிர்காலம் என்பதையும் திடமாக நம்பினார். ஒரு இளைஞன் அறிவாற்றல் மிக்கவனாக இருப்பின் அவன் சார்ந்த சமூகமும் நாடும் முன்னோக்கிச் செல்லும், அதே இளைஞன் எதிர்மறை எண்ணம் கொண்டவனாக இருந்தால்
அவனை சார்ந்துள்ள அனைத்துமே பின்னோக்கிச் சென்றுவிடும் என்பதுதான் விவேகானந்தரின் கூற்று. மதிப்புமிக்க இளைஞன் தேசப்பற்று, வீரம், ஒழுக்கம், நெஞ்சுரம், உத்வேகம் உள்ளிட்டைவைகளை தன்னுள் கொண்டு வாழ்வான் என்றால் அவனுடைய தேசம் உலகின் உன்னத உயர்ந்த தேசமாக மாறும் என்று சுவாமி விவேகானந்தர் அடிக்கடி கூறிக்கொண்டிருந்தார்.

ஆனால் இன்றைய இளைஞர்களோ! மது உள்ளிட்ட போதை பழக்கத்திற்கு அடிமையாகி தங்கள் வாழ்விழந்து நிற்கின்றனர். இவர்களால் சமூகத்திற்கும் நாட்டிற்கும் எவ்வித பலன்களும் இல்லாமல் போவது பேரவலமான ஒன்று. வளர்ந்துவிட்ட தொழில்நுட்பத்தை தவறாக
பயன்படுத்துவதும் கற்ற கல்வியை குற்றங்கள் செய்வதற்காக இழிவுபடுத்துவதும் தொடர்கதையாகிவிட்டன. தொலைநோக்கு பார்வை இல்லாமல் சாதி, மதம், மொழி என பாகுபட்டு நிற்பதோடு மனித தன்மையையும் இழந்து காணப்படுகின்றனர். இளைஞர்கள் ஒன்றுபட்டால் அதன் முன்னால் எந்த சக்தியாலும் எதுவும் செய்திட முடியாது. இதையெல்லாம் இளைஞர்கள் தாங்களாகவே முன்வந்து உணர்ந்தால் மட்டுமே உண்டு.

எதிர்காலத்தில் இதுபோன்று இளைஞர்கள் திசைமாறி சென்றுவிடக் கூடாது என்பதற்காகவே! தனது ஒவ்வொரு நொடியையும் வாழ்ந்து வந்தார் விவேகானந்தர். 39 ஆண்டுகள் மட்டுமே அவர் இம்மண்ணில் வாழ்ந்திருந்தாலும் இவ்வுலகிற்கும் இளைஞர்களுக்காகவும் உதிர்த்த வார்த்தைகளோ ஏராளம் ஏராளம். அவைகள் அனைத்துமே சுமார் மூன்றாயிரம் ஆண்டுகளையும் கடந்து நிற்கும் வீரியம் உடையது. அவர் சொற்பொழிவாற்றிய
உரைகள் அனைத்துமே மானுடத்திற்கான மிகப்பெரிய வாழ்வியல் தத்துவங்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை. அப்பேற்பட்ட மஹான் வாழ்ந்த பூமியில் நாமும் வாழ்வதே நமக்கு கிடைத்த ஆகச்சிறந்த வரம். உலகில் அதிக இளைஞர் சக்தியை கொண்டுள்ள நம்நாடு, விவேகானந்தர் போதித்த சொல்நின்று இத்திருநாட்டை உலகம் போற்றும் உயர்ந்த தேசமாக்க வேண்டும். இதுவே விவேகானந்தரின் பிறந்தநாளான தேசிய இளைஞர்கள்
தினத்தில் நாம் ஏற்க வேண்டிய உறுதிமொழியாகும்!

Tags
Show More

Related News

Back to top button
Close