உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி ஆகியோர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது – தலைவர்கள் கண்டனம்

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி ஆகியோர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதை தலைவர்கள் பலரும் கடுமையாக கண்டித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டது. அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடக்கும் போராட்டங்களை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பல கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு விதித்தது. பாதுகாப்புக்காக ராணுவ வீரர்களும் அப்பகுதியில் அதிக அளவில் நிறுத்தியது மட்டுமல்லாமல், நூற்றுக்கணக்கான முக்கிய அரசியல் தலைவர்களையும் தடுப்புக் காவலில் வைத்தனர். முன்னாள் முதலமைச்சர்கள் ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்ளிட்டோரும் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

6 மாதங்கள் ஆகியும் இவர்கள் விடுவிக்கப்படாமல் உள்ளனர். அங்கு அமைதி திரும்பிய நிலையில், கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுவிட்டன. வீட்டுக் காவலில் உள்ள அரசியல் தலைவா்களும் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி மீது பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. இது தொடர்பாக மெகபூபா முப்தியின் மகள்,  மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார். 9 வயது சிறுவர்கள் மீது கூட தேசத்துரோக வழக்கு பதிவு செய்யும் சர்வாதிகார அரசிடம் இருந்து, இத்தகைய நடவடிக்கைகளை எதிர்பார்த்தோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஒருவரை எந்த விசாரணையுமின்றி 2 ஆண்டுகள் வீட்டுக்காவலில் வைத்திருக்க பொது பாதுகாப்பு சட்டம் வழிவகை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி ஆகியோரை பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பதற்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். நீதியற்ற சட்டங்கள் இயற்றும் போது மக்கள் அதனை அமைதியாக எதிர்ப்பதை தவிர வேறு என்ன வழியிருக்க முடியும் என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

What do you think?

அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் 3-வது நாளாக ஐ.டி. ரெய்டு..!

டெல்லியில் நாளை வாக்குப்பதிவு – பாஜகவுக்கு சோதனை!