குஜராத் நிறுவனத்தின் ஏகபோகத்திற்கு மத்திய அரசு வழிவகுக்கின்றதா? – வைகோ கேள்வி

கொரோனா தொற்று அறியும் கருவி குஜராத் நிறுவனத்தின் ஏகபோகத்திற்கு இந்திய அரசு வழிவகுக்கின்றதா? என்று மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அயறிக்கையில், இந்திய அரசின் நல்வாழ்வுத்துறை கடந்த சனிக்கிழமை அன்று, கோவிட்-19 நோய் தொற்றைக் கண்டு அறிவதற்காக, ஆய்வகங்கள் பயன்படுத்த வேண்டிய கருவிகளின் தரம் குறித்த வரையறை ஒன்றை அறிவித்திருக்கின்றது.

அதன்படி, அமெரிக்க அரசின் உணவு மற்றும் மருந்து நிறுவனம் அல்லது ஐரோப்பிய தரச்சான்று பெற்ற கருவிகளை மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால், தற்போது நம் நாட்டில் உள்ள ஆய்வகங்களில் பெரும்பாலும் சீனா அல்லது தென்கொரியாவில் வாங்கப்பட்ட கருவிகளே பயன்பாட்டில் உள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இன்று நிலவுகின்ற நெருக்கடியான சூழலில், அரசு வலியுறுத்துவது போல அமெரிக்கா அல்லது ஐரோப்பியத் தரச்சான்றிதழை எப்படிப் பெற முடியும்?. நடுவண் அரசின் அறிவிப்பின்படி புனேயில் இயங்கி வருகின்ற இந்திய அரசின் நுண்ம நச்சு ஆய்வு நிறுவனம் கூட இயங்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும் என்பதை வைகோ சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகின் பெரும்பாலான நாடுகளில் கொரோனா தொற்று பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கின்ற நிலையில், இத்தகைய சோதனை கருவிகள் எல்லோருக்கும் தேவைப்படுகின்றது. எனவே, யாரும் ஏற்றுமதி செய்ய மாட்டார்கள். நமது தேவைகளுக்கு ஏற்ற கருவிகள் இப்போது கிடைக்காது.

இந்தநிலையில், இந்திய ஆய்வகங்கள் நடுவண் அரசின் தரக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ் பெறுவதில் முட்டுக்கட்டைகள் ஏற்பட்டால், அது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். சீனா, தென்கொரியாவில் இருந்தும் இறக்குமதி செய்ய முடியாது.

அமெரிக்கா, ஐரோப்பியச் சான்றிதழ்தான் தேவை என்றால், இதற்கு முன்பு இந்திய நிறுவனங்கள் இயங்க இந்திய அரசு உரிமம் கொடுத்தது கேலிக்கூத்து ஆகிவிடும் என்று வைகோ குறிப்பிட்டுள்ளார்.

அரசு அறிவித்துள்ள புதிய நெறிமுறைகளின்படி, தற்போது இந்தியாவில் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் இயங்கி வருகின்ற கோசாரா டயக்னாஸ்டிக்ஸ் என்ற ஒரேயொரு நிறுவனம்தான், மேற்கண்ட சான்றிதழைப் பெற்றிருக்கின்றது. அந்த நிறுவனத்தை மட்டுமே ஏகபோக உரிமையாளராக ஆக்குவதற்கு இந்திய அரசு முயற்சிக்கின்றதா? என்றும் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே, இந்திய நிறுவனங்களின் செயல்பாட்டை முடக்குகின்ற புதிய விதிமுறைகளை, நடுவண் அரசு உடனே திரும்பபெற வேண்டும் என வைகோ தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

What do you think?

முக கவசம், சானிட்டைசர் அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை!

ஆம்னி பேருந்து சேவைகள் நிறுத்தம்!