குடியரசு நாள் அணிவகுப்பில் சில மாநில அரசுகளின் ஊர்திகளுக்கு இடம் தராதது ஏன்? – வைகோ கேள்வி

குடியரசு நாள் அணிவகுப்பில் சில மாநில அரசுகளின் ஊர்திகளுக்கு இடம் தராதது ஏன்? என்ற மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை எம்.பி.யுமான வைகோவின் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதலளித்துள்ளார்.

மாநிலங்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் விளக்கம் கோரி வைகோ சில கேள்விகளை எழுப்பினார். அதில், 2020 ஜனவரி 26 குடியரசு நாள் அணிவகுப்பில் சில மாநிலங்களின் ஊர்திகளுக்கு இடம் மறுக்கப்பட்டதா? எந்த அடிப்படையில் ஊர்திகள் தேர்வு செய்யப்படுகின்றன? கடந்த ஐந்து ஆண்டுகளில், இடம் மறுக்கப்பட்ட ஊர்திகள் குறித்த விவரங்களைத் தருக என வைகோ கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக், குடியரசு நாள் அணிவகுப்பில் பங்கேற்கின்ற ஊர்திகள் தேர்வு குறித்து தெளிவாக வழிமுறைகள் வகுக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார். அனைத்து மாநில அரசுகள், நடுவண் அரசின் நேரடி ஆட்சிப்பகுதிகள், நடுவண் அமைச்சரகங்கள், துறைகளின் சார்பில் பங்கேற்க இருக்கின்ற ஊர்திகள் குறித்து விண்ணப்பம் பெறப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊர்திகளைத் தேர்வு செய்ய கலை, பண்பாடு, ஓவியம், சிற்பம், இசை, கட்டுமானம், நடனம் ஆகிய துறைகளில் தேர்ந்த அறிஞர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு இருப்பதாக அவர் கூறியுள்ளார். ஊர்திகள் வெளிப்படுத்தும் கருத்து, வடிவமைப்பு, கலை வேலைப்பாடுகள் குறித்து அறிஞர்கள் குழு ஆய்வு செய்வது, பங்கேற்கத் தகுதியான ஊர்திகளைத் தேர்வு செய்து அரசுக்குப் பரிந்துரை செய்வதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். பேரணியின் நேரம் கருதி அதற்கு ஏற்ற வகையில் ஊர்திகளை அறிஞர்கள் குழு தேர்வு செய்வதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் மறுக்கப்பட்ட ஊர்திகள் குறித்த விவரங்களை அமைச்சர் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

அன்புச்செழியன் வீட்டில் 65 கோடி பறிமுதல்? – வருமானவரித் துறையினர் அதிரடி!

‘உள்நோக்கம் இல்லை, வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்’ – திண்டுக்கல் சீனிவாசன்