‘தாய்லாந்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் விரைவில் கரூர் வந்து சேரும்’ – வைகோவின் முயற்சிக்கு பலன்

தாய்லாந்து நாட்டில் இறந்த தமிழக இளைஞரின் உடல் ஓரிரு நாள்களில் கரூர் வந்து சேரும் என்று வைகோ எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

கரூர் மாவட்டம் கருப்பூர் மாயனூர் சங்கரன்மலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பொறியாளர் பிரகாஷ் நடராஜன். 2017 ஆம் ஆண்டு, தாய்லாந்து நாட்டில் வேலைக்குச் சென்ற அந்த இளைஞர், 2018 ஆம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் சிக்கியதால் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கே, அவர் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வந்தது.

கரூர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் கபினி சிதம்பரம், மாணவர் அணிச் செயலாளர் பால சசிகுமார் ஆகியோர் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவின் கவனத்திற்கு இதனை கொண்டு சென்றனர். இதையடுத்து, “வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை மின்அஞ்சல் வழியாகத் தொடர்பு கொண்ட வைகோ, இளைஞரின் உடலை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தார்”.

இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தில் இருந்து தாய்லாந்து தூதரகத்தை அதிகாரிகள் தொடர்பு கொண்டனர். அப்போது, இறந்தவருடைய குடும்பத்தினர் கரூர் மாவட்ட ஆட்சியர், காவல்துறைக் கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டதாக பாங்காங்கில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.

“உடலை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான ஆவணங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், ஏசியா ஒன் என்ற பொருள் போக்குவரத்துத் துறையினர் அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதற்கான செலவுகளைக் குடும்பத்தினர் ஏற்க இயலாத நிலையைக் கருதி இந்திய சமூக நல நிதியில் இருந்து ஈடுகட்ட, தூதர் ஒப்புதல் தந்துள்ளதாகவும், அடுத்த 3 அல்லது 4 நாள்களில் உடல் சென்னைக்கு வந்து சேரும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அங்கிருந்து, கரூருக்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாக பாங்காக்கில் உள்ள இந்திய தூதரக அதிகாரி கூறியுள்ளார். இந்தத் தகவலை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

What do you think?

‘உள்நோக்கம் இல்லை, வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்’ – திண்டுக்கல் சீனிவாசன்

“ஆண்டவனே தவறு செய்தாலும் தவறுதான், விஜய் விவகாரத்தில் தலையிட மாட்டோம்” – செல்லூர் ராஜூ