நடிகர் விஜய்யிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை!

பிகில் திரைப்படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனதுக்கு சொந்தமான இடங்களைத் தொடர்ந்து நடிகர் விஜய் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

வரி ஏய்ப்பு புகார் காரணமாக சினிமா தயாரிப்பு நிறுவனமாக ஏ.ஜி.எஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 20 இடங்களில் காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு அலுவலகத்திலும் சோதனை நடத்தப்படுகிறது. பிகில் திரைப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்திருந்ததால், நடிகர் விஜய்யிடமும் வருமானவரித்துறை அதிகாரிகள்  விசாரணை மேற்கொண்டனர்.

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் நடைபெற்று வரும் மாஸ்டர் திரைபடத்தின் படப்பிடிப்பு தளத்துக்கு சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள், 2 மணி நேரம் காத்திருந்து விசாரணை சம்மனை கொடுத்ததாக கூறப்படுகிறது. முதலில் விஜய்யை சந்திக்க படக்குழு அனுமதி மறுத்த நிலையில் பின்பு விஜய்யிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதனால், மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், நடிகர் விஜய்க்கு சொந்தமான நீலாங்கரை மற்றும் சாலிகிராமத்தில் உள்ள வீடுகளிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். பிகில் திரைப்படத்துக்கு பெற்ற ஊதியம் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2017 ஆம் ஆண்டு வெளியான மெர்சல் திரைப்படத்தில் சரக்கு மற்றும் சேவை வரி, பணமதிப்பிழப்பு திட்டங்களுக்கு எதிரான வசனங்கள் இடம்பெற்றிருந்தது. ஹெச்.ராஜா உள்ளிட்ட தமிழக பா.ஜ.க தலைவர்கள் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்குமாறு கடும் எதிர்ப்புகளை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

What do you think?

பழிவாங்கும் படலமா? – இந்தியாவை மெகா சேஸ் செய்த நியூசி!

இறுதிகட்ட படப்பிடிப்பில் தனுஷின் கர்ணன்