வைகோவின் கோரிக்கை மாநிலங்களவையில் ஏற்பு!

மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை எம்பியுமான வைகோ விடுத்த கோரிக்கையை ஏற்று, அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரியத்தை இடமாற்றம் செய்யும் எண்ணமில்லை என அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

நேற்று (பிப்-4) கூடிய மாநிலங்களவையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு, அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரியத்தை சென்னையில் இருந்து மாற்றக்கூடாது என கோரிக்கை வைத்தார். 2003 ஆம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்ட அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரியம், கடந்த 17 ஆண்டுகளாக டிரேட்மார்க் மற்றும் காப்புரிமை சட்டங்களின் கீழ் பதியப்படும் வழக்குகளில் மேல்முறையீட்டை அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு மையம் விசாரித்துத் தீர்ப்பளித்து வருகிறது. இந்நிலையில் இந்த மையத்தை சென்னையிலிருந்து மாற்றுவதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வந்தது.

இதுதொடர்பாக மாநிலங்களவையில் பேசிய வைகோ, “வழக்கு தொடுத்தவர்களுடைய வசதிகளைக் கருதி, நாடு முழுவதும் பரவலாக அறிவுசார் சொத்துரிமை மேல் முறையீட்டு வாரியத்தின் புதிய கிளைகளை அமைக்க, மத்திய அரசு முன்வர வேண்டும். அதைவிட்டு தகுந்த காரணங்கள் ஏதுமின்றி, தலைமையகத்தை இடம் மாற்றுவதற்காக மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் நேர்மை அற்றவை. இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில், கணினிகளின் வழியாகவே மேல்முறையீடு செய்ய முடியும் என்கின்ற நிலையில், தலைமையகத்தை இடம் மாற்றுவதற்கான தேவை எதுவும் இல்லை” என்று தெரிவித்தார். மேலும், “உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் நிறுவிட வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகின்ற நிலையில், சென்னையில் உள்ள அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரியத்தை, வடஇந்தியாவுக்கு மாற்ற முயற்சி செய்வது, இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது” என குறிப்பிட்டார்.

இதையடுத்து மாநிலங்களவையில் உரையாற்றிய வணிக வரித்துறை அமைச்சர் பியூஸ் கோயல், “வைகோவின் கோரிக்கையை ஏற்கிறேன், அறிவுசார் சொத்துரிமை மேல் முறையீட்டு வாரியத்தின் தலைமை அலுவலகத்தை சென்னையில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை” என்று உறுதியளித்தார். மேலும், புதிய கிளைகளை அமைக்க அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

What do you think?

ஆவின் பால் உற்பத்தி அதிகரிப்பு?

நிர்பயா வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு !