டெல்லியில் 16 வயது சிறுமி 20 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
நடந்தது என்ன?
டெல்லி ஷஹாபாத் ஜேஜே காலனியில் 16 வயது சிறுமியை கொடூரமாக கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.சிறுமியின் வீட்டிற்கு வெளியே வைத்து சிறுவன் ஒருவன் கத்தியால் பல முறை குத்திவிட்டு , கல்லை எடுத்து சிறுமியின் மீது போட்டுவிட்டு தப்பி சென்றான்
தகவலின்படி , கத்தியால் சிறுமியை 20 முறை குத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரையும் கல்லால் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் முழுவதும் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.சம்பவத்தின் போது சுற்றிலும் சிலர் இருந்ததாகவும் ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்களை தடுக்க யாரும் துணியவில்லை என்றும் கூறப்படுகிறது.
சிக்கியது சிசிடிவி காட்சிகள்:
சிசிடிவி காட்சியை கொண்டு தலைமறைவான குற்றவாளிகளைத் தேடும் பணியில் டெல்லி காவல்துறை ஈடுபட்டனர். மேலும், குற்றவாளியை கைது செய்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் கொலைக்கான காரணம் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இளைஞர் கைது:
இந்த சூழ்நிலையில், அதிரடியில் இறங்கிய டெல்லி காவல்துறை, குற்றம்சாட்டப்பட்ட இளைஞரான சாஹிலை கைது செய்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் வைத்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து டெல்லி மகளிர் ஆணையர் ஸ்வாதி மாலிவால் , சிசிடிவி காட்சியை பகிர்ந்து , “என் வாழ்க்கையில் , இதை விட பயங்கரமான சம்பதை இதுவரை பார்த்ததில்லை. எல்லா வரம்புகளும் கடந்து விட்டது. இந்த சம்பவம் குறித்து டெல்லி காவல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்
தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு எதிராக இதுபோன்ற கொடூரமான சம்பவங்கள் நிகழ்வது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது என்பது பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியும் வருத்தம் அளிக்க கூடியதாக உள்ளது/