தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அதிகனமழை பெய்ய இருப்பதால் சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தெற்கு வங்கக்கடலின் மத்திய கிழக்கு மற்றும் பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இலங்கை மற்றும் தமிழக கடற்கரை நோக்கி நகரக் கூடும்.
இதன் காரணமாக இன்று(மார்ச்.02) தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை( மார்ச். 03) தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மத்ஹழை பெய்யக்கூடும்.
நாளை மறுநாள்( மார்ச். 04) கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் அதிகனமழையும், தஞ்சாவூர், திருவாரூர் ,நாகப்பட்டினம் ,மயிலாடுதுறை ,செங்கல்பட்டு ,காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழையும் ,சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ,திருப்பத்தூர், திருச்சி ,பெரம்பலூர் ,அரியலூர் ,வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மார்ச் 4 ஆம் தேதி மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதிகள் , வட தமிழகம் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் , இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.இதனால் மீனவர்கள் யாரும் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்,’ என குறிப்பிடப்பட்டுள்ளது.