27 மாணவர்கள் தற்கொலை..! காரணமான நீட்..! திருவாரூரில் தொடர்ந்த போராட்டம்..!
திருவாரூரில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிட இயக்க தமிழர் பேரவை சுப.வீரபாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்கள், அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப வீரபாண்டியன் கலந்து கொண்டு நீட் தேர்வினால் ஏற்படும் பாதகங்கள் குறித்து விளக்கி பேசினார். தொடர்ந்து நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும், குஜராத்தில் முதலமைச்சராக மோடி இருந்தபோது நீட் தேர்வை எதிர்த்தது குறித்தும் விளக்கமாக எடுத்து கூறி கண்டனம் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சுப. வீரபாண்டியன்.. 2013 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான அரசுதான் நீட் தேர்வு கொண்டு வந்தது என்றாலும், அப்போது கொண்டு வந்த நீட் தேர்வுக்கும் தற்போது நடைபெறும் நீட் தேர்வுக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. முக்கியமாக மாநிலங்கள் நீட் தேர்வு வேண்டுமா.? வேண்டாமா.? என்பதை முடிவு செய்வதற்கான அதிகாரம் அப்போதைய நீட் தேர்வில் இருந்தது.
ஆனால் தற்போதைய நீட் தேர்வு அனைத்து மாநிலங்களும் கண்டிப்பாக எழுதவேண்டும் என்று தற்போது மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. அப்போது காங்கிரஸ் கொண்டு வந்த நீட் தேர்வை தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத் ஆகிய மாநிலங்கள் எதிர்த்தன. அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடி நீட் தேர்வினை எதிர்த்தார்.
ஆனால் பிரதமராக பதவி ஏற்றவுடன் அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் என நடவடிக்கை எடுத்து வருகிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 27 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். தற்போதைய தமிழக அரசு நீதிபதி ஏ கே ராஜன் தலைமையில் குழுவை அமைத்தது.
அந்த குழு நீட் வேண்டாம் என்பதற்கு மூன்று காரணங்களை கூறியிருக்கிறது. இந்த நீட் அ சமூகத்தில் ஏற்றத்தாழ்வை உருவாக்குகிறது. மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது, மாநகராட்சி, நகராட்சியில் உள்ள வசதிகள் கிராமத்து மாணவர்களுக்கு கிடைக்காது என்பதால் இது மாணவர்களை பாதிக்கிறது. நாடு முழுவதும் சமத்துவம் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது என்றார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..