எரிந்த நிலையில் 3 சடலம்.. மோப்ப நாய் உதவியுடன் திவீர விசாரணை..!
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்து உள்ள காராமணிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (70 ). ஓய்வு பெற்ற மருந்தாளுனரான இவரது மனைவி கமலேஸ்வரி வயது (60).
இவர்களுக்கு சுகந்தகுமார் (40) என்ற மகனும் நிஷாந்த் (8) என்கிற பேரனும் இருந்தனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு சுரேஷ்குமார் உடல்நிலை குறைவால் இறந்துவிட்டார்.
இந்நிலையில் நேற்று காலை இவரது வீட்டிலிருந்து புகையுடன் கூடிய கடும் துர்நாற்றம் வீசியதாக அப்பகுதி மக்கள் நெல்லிக்குப்பம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் அடிப்படையில் நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அப்போது வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்த நிலையில், கதவில் இருந்த பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கு எரிந்த நிலையில் கமலேஸ்வரி, சுதன்குமார், நிஷாந்த் ஆகியோர் உயிரிழந்த நிலையில் கிடந்தனர். மேலும் வீடு முழுவதும் ரத்த வெள்ளத்தில் காட்சி அளித்தது. இதனைத் தொடர்ந்து, போலீசார் அவர்களது உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பின்னர் நெல்லிக்குப்பம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்த 3 பேர் உடலை மீட்டனர். .மேலும் சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் கொண்டு வரப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், உயிரிழந்த சுகந்தகுமார் ஹைதராபாத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனால் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலை செய்தவர்களை குறித்து போலீசார் தீவிர விசாரணை னடத்தி வருகின்றனர். சம்பவம் நிகழ்ந்த வீட்டில் கைப்பற்றப்பட்ட செல்போன்களை ஆய்வு செய்த போது அதிலிருந்து தகவல்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-பவானி கார்த்திக்