ஜப்பான் கப்பலில் 3 இந்தியர்களுக்கு கொரோனா; மொத்தம் 355 பேர் பாதிப்பு

ஜப்பான் கப்பலில் கொரோனா வைரஸ் தொற்று 355 பேருக்கு பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவை மையம் கொண்டுள்ள கொரோனா வைரஸ் உலகின் மற்ற நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் துறைமுகத்துக்கு வந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற சொகுசு கப்பல் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நடுக்கடலிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், அக்கப்பலில் இருக்கும் 3,711 பயணிகளுக்கும் ஊழியர்களுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் பலருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சொகுசு கப்பலில் உள்ள 138 இந்தியர்களில், 132 பேர் கப்பல் ஊழியர்கள். இவர்களில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜப்பான் நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் கட்டோ, இதுவரை 1,219 பேரிடம் பரிசோதனை மேற்கொண்டதாகவும், இதில் 355 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். மேலும், கடுமையான பாதிப்பு, உயிரிழப்புகளை தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் பற்றி நாம் இப்பொழுது சிந்திக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கப்பலில் தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொண்டு கொரோனா பாதிப்பு இல்லாதவர்கள் கப்பலில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று ஜப்பான் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்கிடையே சீனாவின் வுகான் நகரில் இருந்து, ஜப்பான் திரும்பிய 53 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

What do you think?

ஐபிஎல் 2020 : முதல் போட்டியில் சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ் மோதல்

“அனைவருக்காகவும் உழைப்பேன்” – அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி