மதுரையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வரும் 10 வயதுடைய சிறுமி ஸ்விகி நிறுவனத்தில் உணவு ஆர்டர் செய்துள்ளார். பின்னர், உணவை ஸ்விகியின் ஊழியர் ஆண்டனி டேவிட்ராஜ் என்பவர் டெலிவரி செய்த போது, சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமி இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் மதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, போலீசார் ஆண்டனியை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதே போல திருச்சியில் நடந்த மற்றொரு சம்பவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர், ஏர்போர்ட் வசந்த் நகரைச் சேர்ந்தவர் நாசர். இவர் பிரபல தனியார் ஹோட்டல் உரிமையாளரின் மகன் ஆவார். இவரது நண்பர் வேலுமணி. இவர்கள் இருவருக்கம் அங்குள்ள பெண் ஒருவருடன் தொடர்பு இருந்துள்ளது. நேற்று அந்த பெண்ணின் 5 வயது மகனை தன்னுடன் காரில் அழைத்து சென்ற நாசர் பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் , சிறுவன் அலறியுள்ளான். இதனை கவனித்த பொதுமக்கள் நாசரின் காரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவருடன் இருந்த வேலுமணி தப்பி ஓடினார். இதனையடுத்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் நாசரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர். வேலுமணியை போலீசார் தேடி வருகின்றனர்.