4 கோடி ரூபாய் பணம்..! நயினார் நாகேந்திரன் உட்பட 4 பேருக்கு சிபிசிஐடி சம்மன்..!
நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது சென்னையில் இருந்து நெல்லை செல்லும் இரயிலில் 4 கோடி ரூபாய் பணத்தை கொண்டு செல்லப்படுவதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு ஏப்ரல் 3ம் தேதி அன்று இரவு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பெயரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் செந்தில்பாலமணி, துணை கமிஷனர் பவன்குமார் ரெட்டி, உதவி கமிஷனர் நெல்சன் மற்றும் போலீஸ் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அதன்படி நெல்லை எக்ஸ்பிரஸ் எஸ்-7 பெட்டியில் பயணம் செய்த 3 பேர் வைத்திருந்த 6 பைகளில் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக கிடைத்துள்ளது. அவர்களிடம் விசாரணை செய்ததில் 3 பேரும் மாறி மாறி பதில் அளித்துள்ளனர்.
மேலும் அவர்களிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் 3 கோடியே 99 லட்சம் ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து தாம்பரம் தாசில்தார் நடராஜனிடம் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
இதனை தொடர்ந்து அந்த 3 பேரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் சதீஷ், நவீன், பெருமாள் என்பது தெரிய வந்தது. மேலும் இவர்கள் மூன்று பேரும் பாஜக நிர்வாகிகள் என்பதும் தெரியவந்தது.
அவர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் இருவரும் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நயினார் நாகேந்திரனின் ஓட்டலில் வேலை செய்து வருவதும், பெருமாள் என்பவர் நயினார் நாகேந்திரனின் உறவினர் என்பதும் தெரிய வந்தது. 3 பேரும் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் நெல்லை தொகுதி தேர்தல் செலவுக்காக பணத்தை கொண்டு செல்வதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
சட்ட விரோதமாக இரயிலில் கடத்தி கொண்டு சென்ற இந்த பணத்துக்கு கணக்கு ஏதும் இல்லாத நிலையில் 3 பேரையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதையடுத்து இந்த பணத்தை நெல்லையில் வாங்குவதற்கு தயாராக இருந்த நபர்கள் யார்..? என்பது பற்றியும், பணம் எங்கே இருந்து எடுத்து வரப்பட்டது..? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போதே பல அதிர்ச்சி தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து 4 கோடி ரூபாய் பணத்தின் முழு பின்னணி குறித்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் நயினார் நாகேந்திரனின் உறவினரான முருகன் என்பவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
விதிகளை மீறி தேர்தல் பிரசாரம் செய்ததாக நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், மற்றும் அவரது ஆதரவாளர்கள் 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து தாம்பரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், பின்னர் சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டது.
பணத்துடன் பிடிபட்ட நயினார் நாகேந்திரனின் கார் ஓட்டுநர் உள்ளிட்டோரிடம் சிபிசிஐடி காவலர்கள் விசாரணை நடத்தியுள்ள நிலையில், நயினார் நாகேந்திரனை மே 31 நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளனர்.
அதேபோல், சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், பாஜக நிர்வாகி கோவர்த்தன், நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் ஆகியோரையும் நாளை மறுநாள் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..