திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதையில் நடந்து சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவில் பக்தர்கள் அடர்ந்த வனப்பகுதியில் நடந்து செல்வதால் அங்கு வனவிலங்குகள் தாக்குதலுக்கும் உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், போத்தி ரெட்டி பாலத்தை சேர்ந்தவர் தினேஷ் குமார். அவரது மனைவி சசிகலா. மகள் லக்ஷிதா (வயது 6). நேற்று இரவு திருப்பதி வந்தனர். இவர்கள் நடைப்பாதயில் மலையேறி கோவிலுக்கு சென்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது அலிபிரி மலைப்பாதையில் சென்றுக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை சிறுத்தை கவ்வி காட்டுப்பகுதிக்கு இழுத்து சென்றது. பின்னர், லட்சுமி நரசிம்மசாமி கோவில் அருகே சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தனது மகளின் உடலை பார்த்து பெற்றோர் கதறி துடித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தை தாக்கி சிறுமி பலியான சம்பவம் பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.