அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான 9 முக்கிய அறிவிப்புகள்..!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி விதி 110-ன்கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
நிர்வாகத்தினுடைய தூண்களாவும், அரசின் கரங்களாவும் விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். இந்த திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதிலிருந்து எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களும், பல்வேறு துறைகளில் திட்டப் பணிகளும் பாராட்டத்தக்க வகையில் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
நம் மாநிலம் அகில இந்திய அளவில் முதலிடத்திலும், பல்வேறு மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார். அரசு நடைமுறைப்படுத்தி வருகிற நலத் திட்டங்கள், யாருக்கும் விட்டுப் போகாமல், அனைத்து மக்களையும் சென்றடைய பணியாற்றும் அரசு ஊழியர் ஒவ்வொருவரையும் இந்த தருணத்தில் தமிழ்நாடு அரசின் சார்பிலேயும், தனிப்பட்ட முறையிலேயும் பாராட்டி, வாழ்த்தி மகிழ்கிறேன்.
கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்திலே, அரசின் நிதிநிலையின் மீது ஏற்பட்ட பெரும் சுமையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு அலுவலர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறையை, 01.04.2026 முதல், 15 நாட்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறும் வகையில் மீண்டும் செயல்படுத்திட 2025-2026-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இருப்பினும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் சில முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுடைய கோரிக்கைகள் மறுபரிசீலனை செய்யப்படும். எடுக்கப்பட்ட விடுப்பு நாட்களில், 15 நாட்கள் வரை பணப்பயன் பெறலாம் என்று தெரிவித்தார். மேலும் இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது படி, 8 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றிற்கு 3 ஆயிரத்து 561 கோடி ரூபாய் கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்து இதனை நிறைவேற்றும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
01-01-2025 முதல் 2 விழுக்காடு அகவிலைப்படியினை ஒன்றிய அரசு அலுவலர்களுக்கு உயர்த்தி வழங்கிட அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், மாநில அரசுப் பணியாளர்களுக்கும் 01-01-2025 முதல் அகவிலைப்படி 2 விழுக்காடு உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த அகவிலைப்படி உயர்வால் சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் 1252 கோடி ரூபாய் ஆண்டு ஒன்றிற்கு செலவிடப்படும் என்று தெரிவித்தார்
அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், அவர்களுடைய குடும்பத்தினருடன் பண்டிகைகளைச் சிறப்பாகக் கொண்டாடிடும் வகையில், ஏற்கெனவே இதுவரை வழங்கப்பட்டு வரும் பத்தாயிரம் ரூபாய் பண்டிகை கால முன்பணம் தற்போது இருபதாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 இலட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.
அரசுப் பணியாளர்களின் குழந்தைகள் உயர்கல்வி படிப்பதற்காக அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் கல்வி முன்பணம் நடப்பாண்டிலிருந்து, தொழிற்கல்வி பயில 1 இலட்சம் ரூபாயும், கலை மற்றும் அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்வி படிக்க 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்தார். இந்தக் கல்வி முன்பணம் உயர்வால் தங்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில விரும்பும் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.
பணிக்காலத்தில் தேவையின் அடிப்படையில் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திருமண முன்பணம் வழங்கப்படும். பெண் ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும், ஆண்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதனை பலமடங்கு உயர்த்தி அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் பொதுவாக 5லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
பண்டிகை நாட்களில் முன்னாள் கிராம பணியமைப்பு உட்பட C மற்றும் D பிரிவு ஓய்வூதியதாரர்கள், அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் மற்றும் அனைத்துக் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசுத் தொகையானது ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். இந்த உயர்வால் சுமார் நான்கு இலட்சத்து எழுபத்து ஓராயிரம் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்று நெகிழ்ச்சி தெரிவித்தார். இதனால் அரசிற்கு 24 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
ஓய்வூதியதாரர்கள் அவர்தம் குடும்பத்தினருடன் பண்டிகையைச் சிறப்பாக கொண்டாடிட, தற்போது வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம், நான்காயிரம் ரூபாயிலிருந்து ஆறாயிரமாக உயர்த்தி வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி) இந்த உயர்வால், சுமார் 52 ஆயிரம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர். இதனால் பத்து கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில், பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட ஒரு குழு அமைத்து, அந்தக் குழு தனது அறிக்கை மற்றும் பரிந்துரையை ஒன்பது மாதங்களுக்குள் சமர்ப்பிக்க ஆணையிடப்பட்டுள்ளது. பல்வேறு அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையின் அடிப்படையில், இந்தக் குழு தனது அறிக்கை மற்றும் பரிந்துரையை செப்டம்பர் மாதம் 30-ம் தேதிக்குள் சமர்ப்பித்திட அறிவுறுத்தப்படும்.
மகப்பேறு அரசு பெண் பணியாளர்களுக்கு ஒன்பது மாத காலமாக இருந்த விடுப்பு ஓராண்டு காலமாக உயர்த்தப்பட்டு, ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. தகுதிகாண் பருவத்தின் அடிப்படையில் கணக்கீடு பட்டு வந்த மகப்பேறு விடுப்பு காலமானது தற்போது அந்த விதிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதில்லை. இதனால் அவர்களின் பதவி உயர்வு பாதிக்கப்படுவதுடன், பணிமூப்பினை இழக்கும் நிலை ஏற்படுவது வேதனை அளிக்கிறது.
மகளிர் முன்னேற்றத்திற்காக பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வரும் தமிழக அரசு, அரசுப் பணிகளில் பணியாற்றிவரும் மகளிரின் பணி உரிமைகளை பாதுகாக்கும் வகையில், இனிவரும் காலங்களில் அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்புக் காலத்தினை தகுதிகாண் பருவத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார். இவ்வாறே முதலமைச்சர் உரையாற்றினார்.