அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை ராகுல்காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ராகுல்காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்தது. இதனால் ராகுல்காந்தி மீண்டும் எம்.பியாக நாடாளுமன்றத்தில் நுழைவது உறுதியானது. இதை தொடர்ந்து ராகுல்காந்தியின் எம்.பி தகுதி நீக்கத்தை திரும்ப பெற வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் வலியுறுத்தப்பட்டது.
ஆனால் மக்களவை செயலகம் ராகுல்காந்தியின் தகுதி நீக்க அறிவிப்பை உடனடியாக திரும்ப பெறாதாதால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பினர். சூரத் நீதிமன்றம் தண்டனை விதித்த பின், உடனே தகுதி நீக்கம் செய்த சூழலில், அதனை திரும்ப பெற தாமதம் ஏன் காங்கிரஸ் கேள்வி எழுப்பி வந்தது. இந்த நிலையில் மக்களவை செயலகம் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில்,
ராகுல் காந்திக்கு மீண்டும் எம்பி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 4-ம் தேதி வெளியான உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட அறிவிப்பு திரும்பப் பெறுவதாகவும், அவர் வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினராக தொடரலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 24-ல் ராகுல்காந்தியின் பதவி பறிக்கப்பட்ட நிலையில், 4 மாதங்களுக்கு பிறகு தகுதிநீக்கம் திரும்ப பெறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நாளை நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் ராகுல்காந்தி கலந்துகொள்வர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.