ராவணன் கூட மக்கள் பேச்சை கேட்டார், ஆனால் நீங்கள் கேட்கவில்லை என மோடி மீது பகீரங்கமாக மக்களவையில் குற்றச் சாட்டை முன்வைத்தார் எம்.பி ராகுல் காந்தி.
பிரதமர் நரேந்திர மோடியின் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இந்திய நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது. ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடர், மணிப்பூரில் நடந்த வன்முறைகள் குறித்து மோடி உரையாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்களின் எதிர்ப்புகளால் முடக்கப்பட்டு வருகிறது. மேலும் மணிப்பூர் விவகாரத்தில் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்றும் இன்றும் நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது ராகுல் காந்தி உரையாற்றினார்.
ராகுல் காந்தி உரை:
மோடி – அதானி உறவு குறித்து நான் பேச மாட்டேன் பாஜக எம்.பிக்கள் அமைதியாக இருக்கலாம் என மக்களவையில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதயத்தில் இருந்து வரும் வார்த்தைகள் இதயத்திற்கே செல்லும். குமரி முதல் காஷ்மீர் வரையிலான எனது பயணம் இன்னும் முடியவில்லை , நான் அன்பை செலுத்துவதற்கு தான் நடைபயணத்தை மேற்கொண்டேன் என்பதை நான் புரிந்து கொண்டேன். நடைபயணம் மூலம் எனது மனதில் இருந்த வெறுப்புணர்வு அகன்றுவிட்டது.
இந்திய விவசாயிகளின் நிலை மோசமாக இருப்பதை நான் நடைபயணத்தின் போது கண்டேன்.பிரதமர் மணிப்பூர் மாநிலத்தை ஒரு பகுதியாக கருதவில்லை. மேலும் பேசிய அவர், வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் மோடி ஏன் செல்லவில்லை? என கேள்வி எழுப்பினார்.
பிரதமர் மோடி மணிப்பூரை நாட்டின் ஒரு பகுதியாக கருதாததால் அவர் அங்கு செல்லவில்லை என்றார். மேலும் இந்தியாவை கொன்று விட்டீர்கள் என ஆவேசமாக தெரிவித்தார்.மத்திய அரசு தனது செயலால் மணிப்பூரை பிளவு படுத்திவிட்டது.
மணிப்பூரில் பாதிக்கப்பட்ட ஒருவரிடமும் பிரதமர் மோடி பேசிவில்லை என குற்றச்சாட்டு. மணிப்பூர் சம்பவத்தால் பாரதமாதாவை கொன்று விட்டீர்கள் , ஒரு தாய் இங்கு இருக்கிறாள், மற்றொரு தாய் மணிப்பூரில் இருக்கிறார். மணிப்பூரில் ராணுவத்தை பயன்படுத்தினால் ஒரே நாளில் அமைதியை கொண்டு வரலாம்.
மணிப்பூரில் பெண்கள், குழந்தைகள் என அனைவரிடமும் பேசினேன் – அவர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.ராவணன் கூட மக்கள் பேச்சை கேட்டார், நீங்கள் கேட்கவில்லை என ராகுல் காந்தி தெரிவித்தார்.அமித் ஷா மற்றும் அதானி சொல்வதை தான் மோடி கேட்பதாக ராகுல் விமர்சித்தார்.
நீங்கள் பாரத மாதவின் பாதுகாவலர்கள் இல்லை, பாரத மாதாவை கொலை செய்தவர்கள் என ராகுல் காந்தி தெரிவித்தது நாடாளுமன்றத்தை அதிர வைத்தது.