எத்தனை ஆண்டுகளுக்குப் பெண்கள் உரிமைத்தொகை பெறுகிறார்களோ, அத்தனை ஆண்டுகளுக்கும் இந்த ஸ்டாலின்தான் ஆள்கிறான் என்று பொருள் என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அண்ணா பிறந்த நாளில் அவரது சொந்த ஊரான காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் குடும்பத்தலைவிகள் ஆவலுடன் எதிர்பார்த்த ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முறைப்படி தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்திட்டம் குறித்து பேசுகையில்,
“அண்ணாவை தந்த தாய்மடியாம் கலைமிகு காஞ்சி மாநகருக்கு வந்திருக்கிறேன். என்னுடைய அரசியல் பயணத்திற்கு எத்தனையோ உந்து சக்திகள் இருக்கலாம். எல்லாவற்றிகும் சிகரம் வைத்த மாதிரி இருந்தது காஞ்சி மாநகரம். ரொம்ப சின்ன வயதில் கோபாலபுரம் பகுதியில் இளைஞர் திமுக என்ற அமைப்பை ஏற்படுத்தி அந்த அமைப்பின் மூலமாக பொது வாழ்வில் என்னை ஈடுபடுத்தி கொண்டேன். அப்போது பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவது என்னுடைய வழக்கம்.
தமிழர் சமூகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த போகிற கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைக்க இங்கே வந்திருக்கிறேன். இத்திட்டம் தொடங்குவது, அதனை நான் தொடங்கி வைப்பது என் வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிகப் பெரிய பேறாக கருதுகிறேன். தாய் தமிழ்நாட்டிற்கு, தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணா இனி இந்த பெயரை யாராலும் நீக்க முடியாது. இந்த பெயர் நீடிக்கும் காலமெல்லாம் இந்த நாட்டை அண்ணாதுரைதான் ஆள்கிறான் என்று அண்ணா கூறினார். அதே போல் இன்றைக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கும் இந்த மு.க. ஸ்டாலின் சொல்கிறேன், இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குப் பெண்கள் உரிமைத்தொகை பெறுகிறார்களோ, அத்தனை ஆண்டுகளுக்கும் இந்த ஸ்டாலின்தான் ஆள்கிறான் என்று பொருள் ”என பேசினார்.