அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்று கருத்தும் இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக – பாஜக தலைவர் அண்ணாமலை இடையே அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்ட வண்ணம் இருந்தது. அந்த வகையில், ஜெயலலிதா மற்றும் பேரறிஞர் அண்ணாவை தரக்குறைவாக பேசி சர்ச்சையில் சிக்கினார். இதற்கு அதிமுகவின்ர் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அதிமுக இனி பாஜகவுடன் கூட்டணி்யில் இல்லை என அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தெரிவித்தார்.
இந்நிலையில் அதிமுகவின் மூத்தத் தலைவர்களும், முன்னாள் அமைச்சர்களுமான வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் டெல்லிக்கு சென்று பாஜக தேசிய தலைவர் மற்றும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தனர்.
இந்நிலையில் இன்று சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்று கருத்தும் இல்லை. கடந்த 18-ம் தேதி எடுத்த நிலைப்பாட்டில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், தற்போது வேறு எதுவும் கூற இயலாது.
சோதனை பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அதிமுகவினர் பயப்பட மாட்டார்கள். நாளை நடக்கும் மாவட்ட செயலாளர்களின் கூட்டத்தில், அதிமுகவின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்கப்படும். 1972 முதல் அதிமுக பல சோதனைகளை தாண்டி வந்த இயக்கம்.
தமிழக மக்களின் பிரச்சினைகளுக்காவே ஒன்றிய அமைச்சரை அதிமுக நிர்வாகிகள் சந்தித்து பேசினர். ஒன்றிய அமைச்சரிடம் கட்சி சார்ந்து எதுவும் பேசவில்லை. பல நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் அதிமுகவை இருமுறை ஜெயலலிதா வெற்றிப்பெற வைத்தார். இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிக்க: பாஜக எம்.பியின் சர்ச்சைப் பேச்சு.. நாடாளுமன்றம் குப்பைத்தொட்டியா..? வைரமுத்து ஆவேசம்..!