கணவனாகவே இருந்தாலும் மனைவியை கட்டாயப்படுத்தி உடலுறவில் ஈடுபட்டால் அது பாலியல் வன்கொடுமை தான் என கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் தன்னையும் தனது மகளையும் உடல் மற்றும் மன ரீதியாக தனது கணவர் துன்புறுத்துவதாக மனைவி ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், திருமணத்தின் தொடக்கத்திலிருந்தே தன்னை பாலியல் அடிமை போன்று நடத்துவதாகவும், கட்டாய உடல் உறவு மற்றும் இயற்கைக்கு மாறான உறவில் ஈடுபட கட்டாயப்படுத்துவதாகவும் அவர் அதில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அந்த பெண்ணின் கணவன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றம் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று(மார்ச்.23) உயர்நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்த பெண்ணின் கணவன் மீது பதியப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்யப்படாது என்று நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி நாகபிரசன்னா, ” மனிதன் என்பவன் மனிதன் தான். கற்பழிப்பு என்பது ஒரு கற்பழிப்பு, அது ஒரு ஆணாக இருந்தாலும் அந்த ஆண் கணவனாக இருந்தாலும், மனைவியின் சம்மதத்திற்கு மாறாக, பாலியல் உறவில் ஈடுபட்டாலும் அது கற்பழிப்பு தான்.. கணவன் தன் மனைவி மீது நடத்தும் இத்தகைய பாலியல் வன்கொடுமை, மனைவிக்கு மனதளவிலும், உளவியல் ரீதியாகவும், உடலியல் ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும். கணவன்களின் இத்தகைய செயல்கள் மனைவியின் ஆன்மாவை காயப்படுத்துகிறது.ஒரு ஆணுக்கு தண்டனை என்றால், அது ஒரு ஆணுக்கு தண்டனையாக இருக்க வேண்டும், ஆண் கணவனாக இருந்தாலும்,” என்று கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய அவர், ” காலங்காலமாக, கணவன் என்ற அங்கியை அணியும் மனிதன், மனைவியை தனது அடிமையாக பயன்படுத்துகிறான், மனைவியின் ஆட்சியாளர்களாக இருக்கும் கணவர்கள், அவர்களின் உடல், மனம் மற்றும் ஆன்மா என்ற பழங்கால சிந்தனை மற்றும் பாரம்பரியம் அழிக்கப்பட வேண்டும்.
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற பிற நாடுகளில் திருமண பலாத்காரம் சட்டவிரோதமானது.பெண் மீது மிருகத்தனமான கொடூரத்தை கட்டவிழ்த்து விட ஆண்களுக்கு எந்தவிதமான சிறப்பு சலுகைகளோ, உரிமமோ திருமண அமைப்பு வழங்காது, வழங்கவில்லை, வழங்கவும் கூடாது’ என்று தெரிவித்தார்.