உடல்நலக் குறைவு காரணமாக வடபழனியில் சிகிச்சைப் பெற்று வரும் விசிக தலைவரை மதிமுக முதன்மைச் செயலாளர் துரைவைகோ நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களுடன் சந்திப்பு. தாழ்த்தப்பட்ட, பட்டியலின மக்களின் பாதுகாவலராகவும், நம்பிக்கை நட்சத்திரமாகவும் திகழும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி அறிந்து மருத்துவமனைக்கு சென்று அவரது உடல்நலம் பற்றி விசாரித்தேன்.
அயராத அரசியல் பயணத்திற்கு இடையே தங்களின் உடல் நலத்தையும் பேண வேண்டும்.
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். எனவே உடல்நலத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன். ஏற்கனவே தங்களிடமும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழர்களிடமும் பலமுறை இது பற்றி கூறியுள்ளேன் என்றதும், ஆமாம்.. தம்பி ஏற்கனவே பலமுறை கூறியுள்ளார் என்று உடன் இருந்தவர்களிடம் சொல்லிக் காட்டி ஆமோதித்தார்.
தற்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கும் நிலையில் அண்ணனை சந்திக்க வரும் பார்வையாளர்கள் இயன்றவரை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும், தவிர்க்க இயலாத நிலையில் சந்திக்க வரும் பார்வையாளர்கள் கட்டாய முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று அண்ணனிடமும், மருத்துவரிடமும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழர்களிடமும் கேட்டுக்கொண்டேன்.
ஏனென்றால் இதுபோன்ற சூழலில் பார்வையாளர்கள் மூலம் நோய்த் தொற்று ஏற்பட்டு மேலும் பலவீனப்படுத்தி விடும் என்ற அக்கறையுடனும் கவலையுடனும் கேட்டுக் கொண்டேன்.
விரைவில் பூரண நலமடைந்து அரசியல் பயணத்தை தொடர வேண்டும் என்றும், அவ்வப்போது சீரான ஓய்வும், உறக்கமும் தேவை என்று அண்ணனிடம் கூறிவிட்டு விடைபெற்றேன் என குறிப்பிட்டுள்ளார்.