ஏப்ரல் 6ம் தேதி முதல் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
கடந்த 18ஆம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் அன்றைய தினம் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அதற்கு மறுநாள் வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து கடந்த 21ம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வந்தது. இதையடுத்து நேற்று(மார்ச் 24) சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்தப்படுவதற்கான கூட்டத்தொடர் ஏப்ரல் 6ம் தேதி தொடங்குகிறது.
கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்துவது என்று 30ம் தேதி அலுவல் குழு முடிவு செய்யும் என்றும் துறைவாரியாக மானிய கோரிக்கை மீது எந்தெந்த தேதிகளில் விவாதம் நடத்துவது என்பது குறித்தும் அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்து அறிவிக்கும் எனவும் தெரிவித்தார்.