“கருந்தேள் கொட்டின ஹாலாஸ்யரும் பெரியவாளின் கருணையும்”
இதெல்லாம் வேற எங்கேயாவது இருக்கறச்சே வேணும்னா நடக்கலாம். ஆனா பரம வைத்தியரான மகா பெரியவா இருக்கற இடத்துல விஷத்துக்கு என்ன வேலை
ஒரு சமயம் மகானை தரிசிக்கறதுக்காக குடும்பத்தோட ஸ்ரீமடத்துக்கு வந்திருந்தார் ஹாலாஸ்யர். வழக்கத்தை விட அன்னிக்கு கூட்டம் நிறையவே இருந்தது .வந்திருந்தவா எல்லாரும் கொண்டுவந்து குடுத்துண்டு இருந்த கனிவர்க்கம்,புஷ்பம்னு பலதும் மூங்கில் கூடைகளில் நிறைஞ்சு இருந்தது.
கொஞ்சம் வெயில் அதிகமான நாள் அது. ஆனா மடத்துக்குள்ளே சந்திரசேகரர் இருக்கறச்சே அங்கே வெம்மை என்ன செஞ்சுடும்? அதோட அவரோட கருணை மழையும் வற்றாமப் பொழிவதால் மடத்துக்குள்ளே, அதுவும் குறிப்பா மகாபெரியவா அமர்ந்து அனுகிரஹம் செஞ்சுண்டு இருந்த இடத்தை சுத்தி குளுமையா தான் இருந்தது.
பக்தர் கூட்டம் மெதுவா நகர்ந்து ஒவ்வொருத்தரா பெரியவாளை தரிசிச்சு நமஸ்காரம் பண்ணி ஆசிர்வாதம் வாங்கிண்டு புறப்பட்டுண்டிருந்தா. வரிசைல வந்து ஹாலாஸ்யரடோ முறை வந்தது.
நமஸ்காரம் பண்ணறதுக்கு முன்னால காணிக்கையா கொண்டு வந்திருந்ததை எல்லாம் மகான் முன்னால சமர்ப்பிச்சுடலாம்னு குனிஞ்சு எல்லாத்தையும் அங்கே இருந்த மூங்கில் தட்டில வைச்சார். .
அப்போதான் அந்த பயங்கரம் நடந்தது. வெயிலோட கடுமைக்கு பயந்து,மகாபெரியவா அண்டையில் இருந்த குளுமையைத் தேடி அங்கே இருந்த ஏதோ ஒரு மூங்கில் தட்டுக்கு அடியில ஒளிஞ்சுண்டு இருந்த கருந்தேள் ஒண்ணு வேகவேகமா வெளியில் வந்து, பக்தர் ஹாலாஸ்யரோட கையில பொட்டுன்னு கொட்டித்து.
அவ்வளவுதான்..அப்படியே துடிச்சுப் போனார் அவர். இதுக்குள்ளே சுத்தி இருந்தவா பலரும் தேள் தேள்னு அலற ஆரம்பிச்சா.
சாதாரணமா தேள் கொட்டினா விறுவிறுன்னு கடுக்கும். விஷம் மளமளன்னு பரவத்தொடங்கும் விரல்..கை..ன்னு பரவி மயக்கம் வரைக்கும், கொண்டு போய்த் தள்ளிடும். அதுவே கருந்தேள்னா கேட்கவே வேண்டாம். விஷத்தோட வீர்யம் ரொம்பவே அதிகமா இருக்கும். சில சமயம் உசுருக்கேகூட ஆபத்து வந்துடலாம்.
ஆனா இதெல்லாம் வேற எங்கேயாவது இருக்கறச்சே வேணும்னா நடக்கலாம். ஆனா பரம வைத்தியரான மகாபெரியவா இருக்கற இடத்துல விஷத்துக்கு என்ன வேலை..?
தேள்கொட்டின வலியில,கையை உதறிண்டு கத்தவும் முடியாம,தாங்கவும் முடியாமத் தவிச்ச ஹாலாஸ்யரை மென்மையாகப் பார்த்தார் மகாபெரியவா….”என்ன! தேள் கொட்டிடுத்தா? ஆமா, தேள் கொட்டினா வலி எப்படி இருக்கும்?” எதுவும் அறியாதவர் மாதிரி கேட்டார்.
ஹாலாஸ்யர் தவிக்க யாரோ சொன்னா..
“தேள் கொட்டித்துனா, ரொம்ப வலிக்கும். தாங்கவே முடியாம விஷம் ஏறிக் கடுக்கும் .சிலசமயம் மயக்கம் கூட வந்துடும் பெரியவா!”
“நீ சொல்லாதே..அவன் சொல்லட்டும்..தேள் கொட்டின வலி ரொம்ப அதிகமா இருக்கா..?இல்லை எறும்பு கடிச்ச மாதிரி இருக்கா..? பெரியவா மகான் கேட்க,
அதுவரைக்கும் வலி அதீதம்னு தவிச்சுண்டு இருந்த ஹாலாஸ்யர், “அப்படியே ஒரு நிமிஷம் அமைதியா நின்னார்.அவருக்குள்ள ஏதோ ஒரு உணர்வு ஓடினது. அவரோட முக பாவத்துலயே புரிஞ்சுது.
அவர் மனசுக்குள்ள எழுந்த எண்ணம் இதுதான்.. ‘தேள் கொட்டினது நினைவிருக்கு, வலிச்சதுன்னு கையை உதறிண்டு தவிச்சது ஞாபகம் இருக்கு. ஆனா இப்போ அந்த வலி எங்கே போச்சு..? ஒண்ணும் புரியாம திகைத்தார். மகா பெரியவாளைப் பார்த்தார்.
“பெரியவா எனக்கு ஆச்சரியமா இருக்கு. வலி எப்படி இருக்குன்னு நீங்க கேட்கற வரைக்கும் அதீதமா வலிச்சமாதிரி இருந்தது.
ஆனா எறும்பு கடிச்சமாதிரி இருக்கான்னு நீங்க கேட்டதும் வலியோட கடுமை சட்டுனு குறைஞ்சு ஏதோ பிள்ளையார் எறும்பு ஊறின மாதிரியான உணர்வுதான் இருக்கு! வலி போன இடம்
தெரியலை.., எல்லாம் உங்க அனுகிரஹம்” தழுதழுப்பாச் சொன்னார்.
“நீ அப்படியா சொல்றே? ஆனா நான் எதுவுமே பண்ணலை..நீதான் தேள் உன் கையில் ஊறினதுமே அது கொட்டிடுத்துன்னு நினைச்சுண்டு பயந்துபோயிட்டே போல இருக்கு.நான் கேட்டதுமே யோசிச்சிருக்கே..
கொட்டலைன்னு புரிஞ்சதும் வலி போயிடுத்துன்னு சொல்றேன்னு எனக்கு தோணறது”-பெரியவா
எல்லாம் வல்ல சித்தர் மாதிரி எல்லாத்தையும் செஞ்சுட்டு, தான் எதுவுமே பண்ணலைன்னு சொல்லிண்ட மகாபெரியவாளோட மகிமையை நினைச்சு,அந்த சிலிர்ப்போட அவர் திருவடியில விழுந்து நமஸ்காரம் செஞ்சார் பக்தர்.
கை நிறைய விபூதியைக் குடுத்து ஆசிர்வாதம் பண்ணினார் மகாபெரியவா. அதை வாங்கி நெத்தியில் இட்டுண்டு,தேள் கொட்டின இடத்துலையும் தடவிண்டார் பக்தர்.எறும்பு கடிச்சமாதிரி இருந்த வலியும் அதுக்கு அப்புறம் அவருக்கு இல்லவே இல்லை.
பக்தர் பிரசாதம் வாங்கிண்டு நகர்ந்ததும்,ஒரு அணுக்கத் தொண்டரை அழைத்து பெரியவா. .”இதோ பார் இதை (தேள்) ஒரு மூங்கில் தட்டத்துல பிடிச்சுண்டுபோய் வெளீல எங்கேயாவது புதர் நிழலில் விட்டுட்டு வா
..பாவம் வெயிலுக்கு பயந்துண்டு இங்கே ஒதுங்கிண்டு இருக்கிறது!ன்னு, சொன்னதுதான் மறுபடியும் எல்லாருக்கும் தேளோட ஞாபகமே வந்தது.
“வெயிலா இருக்கற எடத்துல விடலையே. ஓரமா நிழல்தானே விட்டுட்டு வந்தே!” மகான் இப்படிக் கேட்டதும், மனுஷாகிட்டே மட்டும்னு இல்லாம,சகல ஜீவராசிகள்கிட்டேயும் அவர் வச்சுண்டிருந்த கருணைக்கும் அன்புக்கும் சாட்சி. அந்த சமயத்துல அங்கே இருந்தவாளும், அப்போ பெய்ஞ்ச மழையும் தான்..
– வீர பெருமாள் வீர விநாயகம்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..