மாணவர்களிடம் செல்போன் பறித்த இரண்டு பேர் கைது..!
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரவீன் குமார் இவர் திருப்பூரில் தங்கி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் அகாடமியில் பயின்று வருகிறார்.
இந்நிலையில் பிரவீன் குமார் கடந்த ஐந்தாம் தேதி தனது நண்பர்களான நவீன் குமார், அபிநந்த, கீர்த்திவாசன் ஆகியோருடன் இரவு தேநீர் அருந்துவதற்காக திருப்பூர் யுனிவர்சல் சாலையில் உள்ள தேநீர் கடைக்கு சென்றுள்ளார்.
பின்னர் தேநீர் அருந்திவிட்டு திருப்பூர் ஈஸ்வரன் கோவில் அருகே நான்கு பேரும் நடந்து வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள் நடந்து வந்து கொண்டிருந்த பிரவீன் குமார் மற்றும் அவர்களது நண்பர்களை வழிமறித்துள்ளனர்.
திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி பிரவீன் குமார் கையில் இருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்துக் கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் தப்பி ஓடியுள்ளனர்.
உலனே இதுகுறித்து பிரவீன் குமார் மற்றும் நண்பர்களான நவீன் குமார் ,அபிநந்த், கீர்த்திவாசன் நால்வரும் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்திருந்தனர்.
புகாரின் அடிப்படையில் அங்கிருந்த கண்காணிப்பு சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்தநிலையில் திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த மர்ம நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அந்த நபர்கள் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்தனர்.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் ஒருவர் மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த அஜ்மீர் என்பதும் மற்றொரு நபர் திருப்பூர் கள்ளம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் பாண்டி என்பதும் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த செல்போனை மீட்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த வழிப்பறிச் சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொரு நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்