4வது முறை ஆந்திர முதல்வராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடு..!
ஆந்திர பிரதேசத்தின் முதல்வராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் அப்துல் நசீர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஆந்திராவில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக இருந்து வந்தார். லோக்சபா தேர்தல் அன்றே ஆந்திராவில் சட்டசபை தேர்தலும் ஒன்றாக நடைபெற்றது.
அந்த தேர்தலில் ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு பெரும் தோல்வியை சந்தித்தது. ஆனால் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா மற்றும் பாஜக கட்சிகள் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றது.
ஆந்திராவை பொறுத்தவரையில் மொத்தம் 175 சட்டசபை தொகுதிகள் உள்ளது. அதில் நடந்து முடிந்த தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 135 தொகுதிகளிழும் அமோக வெற்றி பெற்றது.
பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 21 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றது. மொத்தமாக இந்த கூட்டணி 164 இடங்களில் வெற்றி பெற்றது. ஆளும் கட்சியாக இருந்த ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 11 இடங்களில் வெற்றி பெற்று தோல்வி அடைந்தது.
5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக ஆட்சியை பிடித்துள்ளார். அதற்காக கன்னாவரத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது.
இந்த பதவியேற்பு விழாவில் சந்திரபாபு நாயுடுவை தொடர்ந்து, பவன் கல்யாண், நாரா லோகேஷ் உட்பட 24 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி.நட்டா, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நடிகர்கள் ரஜினிகாந்த், பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி, ராம் சரண், முன்னாள் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் நிகழ்வில் பங்கேற்றனர்.
– லோகேஸ்வரி.வெ