குவைத் தீ விபத்தில் தமிழர்கள் பலி.. இரங்கல் சொன்ன அரசியல் தலைவர்கள்..
குவைத், மங்கப் நகரத்தில் உள்ள கட்டிடத்தில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்து, அரசியல் தலைவர்கள் வெளியிட்டுள்ளனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
மேலும் குவைத் அரசோடு இந்திய வெளியுறவுத்துறை பேசி பாதிக்கப்பட்டவர் களுக்கு நிவாரணம் வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக் கொள்வதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
அதேபோல், மதிமுக முதன்மை செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இந்திய அரசு விரைந்து செயல்பட்டு உயிர் இழந்தவர்களின் உடலை அவர்களின் ஊருக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை செய்திட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொண்டு விபத்தில் சிக்கிய தமிழர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளார்.
தீ விபத்தில் பலியான தோழர்களின் குடும்பத்திற்க்கு மதிமுக சார்பில் தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், குவைத் தீ விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தீ விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டைப் பெற்றுத் தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.
மேலும்,காயமடைந்த தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களுக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்க குவைத் அரசு நடவடிக்கை எடுக்க மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.
சிகிச்சை பெறும் அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத் தினருக்கு உரிய இழப்பீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாகவும் தெரித்துள்ளார்.
அதேபோல் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த வெளியிட்டுள்ள அறிக்கையில், குவைத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.
மத்திய அரசு உடனடியாக வேண்டிய அத்தனை உதவிகளைச் செய்து, தமிழர்கள் எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்பதை அறிவிக்க வேண்டும் என்றும் தமது அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார்.
-பவானி கார்த்திக்