விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..! வேட்புமனுத் தாக்கல்..! விதித்த விதிமுறைகள்..!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக-வின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி, கடந்த ஏப்ரல் 6-ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அதைத்தொடர்ந்து அந்த தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் இல்லாத காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ( ஜூன் 14 ) தொடங்கியது. தேதி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை 10 மணி முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ளது.
இந்த இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தங்களது வேட்புமனுவை விக்கிரவாண்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. அதனை அடுத்து வட்டாட்சியர் அலுவலகத்தின் உள்பகுதி, வெளிப்பகுதி உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி, சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் இன்று மூடப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரான மு.சந்திரசேகர் தேர்தல் நடத்தும் அலுவலராகவும், வட்டாட்சியர் க.யுவராஜ் உதவித் தோ்தல் அலுவலராகவும். மாவட்ட ஆட்சியர் சி. பழனி தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.
ஜூன் 16 மற்றும் ஜூன் 17-ம் பக்ரீத் என்பதால் வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய முடியாது எனவும். ஜூன் 21ம் தேதி வரை வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த வேட்பு மனுக்கள் மீதான மறு பரிசீலனை ஜூன் 24-ம் தேதி வரை நடைபெறும். எனவும் மனுக்களைத் திரும்பப் பெற ஜூன் 26ம் தேதி பிற்பகல் 3 மணி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னரே வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து, ஜூலை 10-ம் தேதி வாக்குப்பதிவும், ஜூலை 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர், அவருடன் 4 போ் என மொத்தம் 5 போ் மட்டுமே மனு தாக்கல் செய்யும் இடத்தில் அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் விதிமுறைகளை மீறி அதிகப்படியான வாகனங்களில் வருவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் வேட்பாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பாக எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளதால் விக்கிரவாண்டி வட்டாட்சியரகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் இடைத்தேர்தல் நியமன அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தோ்தல் பணிகளை மேற்கொள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் நியமன அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..