செந்தில் பாலாஜி மனுதாக்கல்..! 40-வது முறையாக..!
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.அல்லி, மனுமீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
இதையடுத்து செந்தில்பாலாஜி தரப்பில்புதிதாக 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் ஒரு மனுவில், கோர்ட்டு உத்தரவுப்படி அசல் ஆவணங்களை வழங்க வங்கிக்கு உத்தரவிட வேண்டுமென்றும், அதுவரை அமலாக்கத்துறை வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
மேலும் செந்தில்பாலாஜி நீதிமன்றகாவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் புழல்சிறையில் இருந்து காணொலி மூலம் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரது நீதிமன்ற காவலை 25-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம் 40-வது முறையாக அவரது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.