கடன் தொல்லை.. ஆன்லைனில் கிரிக்கெட் விளையாடி பணம் இழந்ததால் வாலிபர் விபரீத முடிவு..!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வடதாரை காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் பிரகாஷ் (32). இவருக்கு திருமணமாகி சரண்யா என்ற மனைவியும் 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் மகளிர் சுய உதவிக் குழுகளுக்கு கடன் வழங்கும் பிரிவில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கும் பெண்கள் சரிவர கடனை கட்டாததால் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
மேலும் நிதி நிறுவனத்தில் பணம் கட்டாததால் பிரகாஷின் சம்பள பணத்தை பிடித்தம் செய்துள்ளனர். இதனால் குடும்ப செலவிற்கு பணம் இல்லாமல் தவித்துள்ளா்.
இதனால் அக்கம்பக்கத்தினர் மற்றும் நண்பர்களிடத்தில் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கடனை திரும்ப கொடுப்பதற்கு ஆன்லைனில் கிரிக்கெட் விளையாடி சம்பாதித்து விடலாம் என எண்ணி இருக்கும் பணத்தையும் மீண்டும் கடன் வாங்கியும் ஆன்லைனில் கிரிக்கெட் விளையாடி பணத்தை இழந்துள்ளார்.
இதனால் மன உளைச்சலில் உச்சத்திற்க்கு சென்ற அவர் தனது நண்பருக்கு வாட்ஸ்ஆப்பில் கடன் அதிகமானதால் கடன் காரர்களில் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. இதனால் எனது மனைவிக்கும் எனக்கும் பிரச்சனை ஏற்படுகின்றது. தனக்கு வாழ பிடிக்கவில்லை அதனால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் விஷம் அருந்தி விட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும் தான் இருக்கும் இடத்தையும் லொகேஷன் மூலமாக அனுப்பி உள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர் உடனே அவர் இருக்கும் இடத்திற்கு சென்றனர்.
அங்கு பிரகாஷ் மயங்கிய நிலையில் இருந்ததை கண்டதும் உடனே அவரை மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
பின்னர் இது குறித்து தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்