மீண்டும் அதிகரிக்கும் கள்ளச்சாராயம் விற்பனை..! 5 பேர் மீது அதிரடி நடவடிக்கை..!
கள்ளக்குறிச்சியில் கடந்த மாதம் 18ம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 65க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர். இன்னும் பலர் ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுவை மற்றும் சேலம் ஆகிய மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதுகுறித்து சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் விவாதங்கள் எழுப்பப்பட்டது, உரிய விசாரணை வேண்டும் என சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. அதில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பின் இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
பின் காவலர்கள் மேற்கொண்ட சோதனையில் கள்ளச்சாராய மரண வழக்கு தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை விற்பனை செய்ததாக கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜன், அவரது மனைவி விஜயா, மாதேஷ், ராமர் உள்ளிட்ட 11 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, 3 நாட்கள் விசாரணைக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை அடுத்து, கண்ணுக்குட்டி, விஜயா, சின்னத்துரை, ஜோசப்ராஜா, மாதேஷ், கண்ணன், சக்திவேல், பன்ஷிலால், கௌதம்சந்த், கதிரவன், சிவகுமார் ஆகிய 11 பேரிடம் ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான குழுவினர் விசாரணையை நடத்தி பல்வேறு தகவல்களை பெற்றனர்.
இந்த நிலையில், 3 நாட்கள் காவல் முடிவடைந்த நிலையில், 11 பேரையும் நேற்று புதன்கிழமை கள்ளக்குறிச்சி தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டம் ஆகிய பகுதிகளில் சாராயம் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டு, இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் தரப்பில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் மற்றும் சங்கராபுரம் ஆகிய பகுதியில் கள்ளச்சாராயம் விற்று வந்ததாக கைது செய்யப்பட்ட இருதயராஜ், பழனிசாமி, சக்திவேல், குமார் மற்றும் அண்ணாதுரை ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க ஆட்சியர் எம்.எஸ் பிரசாந்த் உத்தரவு பிறப்பித்தார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..