ரியல் எஸ்டேட் அதிபரால் காரில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு..!
தெலங்கானா மாநிலம் யாதகிரிகுட்டா பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தன். ரியல் எஸ்டேட் அதிபரான இவருக்கு சங்க ரெட்டி என்பவர் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் யாதகிரிகுட்டா அருகே உள்ள மியாபூர் பகுதியில் உள்ள நிலத்தை பார்க்க ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ள ஒரு பெண் விரும்பினார்.
இதுதொடர்பாக ஜனார்த்தன் மற்றும் அவரது உதவியாளர் சங்க ரெட்டியிடம் அந்த பெண் பேசினார். இதையடுத்து நேரில் வாங்க பேசிக்கொள்ளலாம் என்று இருவரும் அந்த பெண்ணிடம் கூறியுள்ளனர்.
இதையடுத்து பெண் நேரில் சென்று ஜனார்த்தன் மற்றும் உதவியாளர் சங்கரெட்டியை சந்தித்தார் அப்போது அவர்கள் 2 பேரும் நிலத்தை நேரில் காண்பிப்பதாக கூறி அந்த பெண்ணை காரில் மியாபூருக்கு அழைத்து சென்றனர்.
நிலத்தை அவரிடம் காண்பிக்க இரவு நேரம் ஆனதால் 3 பேரும் காரில் அங்கிருந்து புறப்பட்டனர். அப்போது திடீரென்று கார் நின்றதால் ஏன் நின்றது அந்த பெண் கேட்டதற்கு இருவரும் கார் பழுதாகி விட்டது என கூறி காரில் ஏற்பட்ட பிரச்சனையை சரிசெய்ய அவர்கள் முயன்றனர்.
ஆனால் அவர்களால் காரை சரிசெய்ய முடியவில்லை. இதையடுத்து அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் தங்கிவிட்டு செல்லலாம் என்று தெரிவித்தனர். இதற்கு அந்த பெண் மறுத்துள்ளார்.
பின்னர் இரவாகிவிட்டது நாங்கள் காரை சரி செய்கிறோம் நீங்கள் இந்த குளிர்பானத்தையாவது குடியுங்கள் என்று வற்புறுத்தி குளிர்பானத்தை வழங்கியுள்ளனர்.
இதையடுத்து அந்த குளிர்பானத்தை சாப்பிட்ட அந்த பெண் திடீரென மயக்க நிலைக்கு சென்றுள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட ஜனார்த்தன் மற்றும் சங்க ரெட்டி ஆகியோர் அந்த பெண்ணை காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மயக்கம் தெளிய நேரம் ஆன நிலையில் இரவு முழுவதும் அவர்கள் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு அந்த பெண்ணை அவர் தங்கிய ஓட்டலில் இறக்கவிட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில் மயக்கம் தெளிந்த அந்த பெண்ணுக்கு உடல்வலி ஏற்பட்டுள்ளது. மேலும் 2 பேரால் தனக்கு நேர்ந்த கொடுமையை அவர் உணர்ந்தார். இதையடுத்து மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற பெண் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் கற்பழிப்பு உள்பட 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்