2 பெண் குழந்தைகளை கடலில் வீசி கொலை செய்த தந்தை… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்..!
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கூனிமேடு குப்பம் கடற்கரை அமைந்துள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் குடிசைகள் அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.
நேற்று முன் தினம் காலை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், கடற்கரை அருகே சென்றபோது சுமார் ஒன்றரை வயது பெண் குழந்தையின் சடலமும் , 4 வயது சிறுமி ஒருவரின் சடலம் கரை ஒதுங்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மரக்காணம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டதை தொடர்ந்து இந்த குழந்தைகள் யார் என்பது என்பது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டபோது புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஆனந்தவேல்-கௌசல்யா தம்பதிகளின் குழந்தைகளான ஒன்றரை வயது சுஷ்மிதா மற்றும் 4 வயது ஜோவிதா என்பது தெரியவந்தது.
கணவன் மனைவி இடையே நீண்ட நாட்களாக குடும்பப் பிரச்சினை இருந்து வந்ததாகவும், நேற்று காலை முதல் ஆனந்தவேல் மாயமாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் தற்கொலை செய்யும் எண்ணத்தில் குழந்தைகளை கடலில் வீசி விட்டு, ஆனந்தவேலும் கடலில் குதித்திருக்கலாம் என அவரது உறவினர்கள் சந்தேகம் தெரிவித்ததை அடுத்து மாயமான ஆனந்தவேலை கண்டுபிடிக்க அவரது செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு செய்தனர். அப்போது அவரது செல்போன் சிக்னல் தொடர்ந்து புதுச்சேரி காலாப்பட்டு பகுதியை காட்டியுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, மரக்காணம் போலீசார் மற்றும் புதுவை போலீசாரும் சேர்ந்து ஆனந்தவேலுவை தேடினர்.
இந்நிலையில், தன்னை போலீசார் தேடுவதை அறிந்து கொண்ட ஆனந்தவேலு நேற்று மதியம் மரக்காணம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் இன்று விசாரித்ததில் இந்த கொலை சம்மந்தமாக பல திடுகிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதில், மனைவி விபசார வழக்கில் கைதானதால் ஏற்பட்ட அவமானம், மனஉளைச்சல் மற்றும் குடும்ப தகராறு காரணமாக குழந்தைகளை கடலில் வீசி கொலை செய்ததாக தெரிவித்தார்.
தந்தையே பெற்ற குழந்தைகளை கடலில் வீசி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்