விழுப்புரம் கலெக்டர் ஆபிஸில் இந்தியன் பட பாணியில்..! அதிர்ச்சியில் அதிகாரிகள்..!
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன்-1 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஊழல் செய்யும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு தக்க பாடம் புகட்டும் ஒரு படமாக இருந்தது. அதனை தொடர்ந்து இந்தியன்-2 திரைப்படம் கடந்த ஜூலை 12ம் தேதி வெளியாகி தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் இந்தியன்-2 திரைப்பட பாணியில் இன்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெறும் அதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு செல்கின்றனர்.
வழக்கம் போல இன்றும் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த ஒருவர், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆண்கள் கழிவறையின் கதவுக்கு பின்னால் “இந்தியன்-2” திரைப்பட பாணியில் ஒரு வாசகத்தை எழுதி வைத்துள்ளார்.
அதில் கலெக்டர் அலுவலகத்தை தேடி வரும் ஏழை, எளிய, பாமர மக்களின் குறைகளை கேட்டு உடனே பூர்த்தி செய்யுங்கள். ஏழை, எளிய மக்களின் கோரிக்கை மனுவை வாங்கி அவர்களுக்கு உதவி செய்யுங்கள். லஞ்சம் வாங்காமல் பணியை செய்யுங்கள் என்று தமிழிலும், இந்தியன்-2 என்று ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தது.
இதனை தனது கோரிக்கை நிறைவேறாத யாரோ ஒருவர், ஆத்திரத்தில், அரசு அதிகாரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற வாசகத்தை எழுதி, கழிவறையின் கதவில் ஒட்டிவிட்டு சென்றிருப்பதாக கூறப்படுகிறது. அதனை எழுதியவர் யார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் விழுப்புரம் கலெக்டர் ஆபிஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..