நெல்லையப்பர் காந்திமதி ஆலயம்.. விமர்சையாக நடைப்பெற்ற ஆடிமாத திருவிழா..
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் காந்திமதி திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் நான்காம் திருநாளான இன்று காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம்’ வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த விழாவையொட்டி காந்திமதி அம்பாள் மரக் கேடயத்தில் வெண்பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார் தொடர்ந்து மேளதாளம் முழங்க காந்திமதி அம்பாள் சுவாமி சன்னதிக்கு சென்று அங்கு சுவாமி இடம் பட்டு வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து ஊஞ்சல் மண்டபத்திற்கு மேலவாத்தியங்கள் இசைக்க எழுந்தருளிய காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு நலங்கும், தொடர்ந்து வளையல் அணிவிக்கும் உற்சவமும் நடைபெற்றது.
அதன் பின்னர் அம்பாளுக்கு மகா தீபாரதனை நடைபெற்றது. அப்போது ஏராளமான பெண்கள் குழந்தை வரம் வேண்டி அம்மனுக்கு வளையல் வாங்கி கொடுத்தனர்.
வளைகாப்பு கோளத்தில் அம்மனை தரிசிக்க ஆயிரக்கணக்கான பெண்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர் இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
-பவானி கார்த்திக்