கிருஷ்ணகிரி பாலியல் சம்பவம்.. குற்றவாளி சிவராமன் உயிரிழப்பு.. !
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், என்.சி.சி முகாம் ஒன்று நடத்தப்பட்டது. அப்போது முகாமில் கலந்துக் கொண்ட 13 மாணவிகளிடம், போலி பயிற்சியாளர் சிவராமன் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பயிற்சியாளர் சிவராமனை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பிறகு, காவல்துறையினர் நடத்திய விசாரணையில், நடந்த சம்பவங்கள் அனைத்தும் உண்மை என்பதை அவர் ஒத்துக்கொண்டார்.
விசாரணைக்கு பிறகு, மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதுகுறித்து காவல்துறையினரிடம் கேட்டதற்கு, கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில், கைது நடவடிக்கைக்கு முன்பாகவே சிவராமன் எலி மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார்.
இதற்கிடையே நேற்று அவர் மீது மீண்டும் ஒரு பாலியல் வழக்கு பதியப்பட்டது. அதாவது கடந்த ஜனவரி மாதம் கிருஷ்ணகிரி தாலுகா காவல்நிலைய எல்லைகுட்பட்ட தனியார் பள்ளி ஒன்றில் போலி என்சிசி முகாம் நடத்திய போது 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த மாணவியின் பெற்றோர் சிவராமன் மீது அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிவராமன் மீது வழக்கு பதிந்தனர்.
இந்தநிலையில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி, இன்று உயிரிழந்துள்ளார்.
முன்னதாக, நேற்று காவேரிப்பட்டினம் அருகே மது போதையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, சிவராமனின் தந்தை அசோக்குமார் தவறி விழுந்து உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலியல் வழக்கில் கைதான குற்றவாளியும், அவரது தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்