பிரியாணி போட்டி.. மளமளவென குவிந்த இளைஞர்கள்… வெற்றி பெறாமல் திரும்பிய சோகம்..!
கோவையில் ரயில் நிலையம் அருகே ரயில் பெட்டி வடிவத்தில் ஹோட்டல் திறக்கப்பட்டிருந்தது. இந்த ஓட்டலை கேரள மாநிலத்தைச் சேர்ந்த செம்மனூர் நகைக்கடை உரிமையாளர் பாபி செம்மனூர் என்பவர்தான் குத்தகைக்கு எடுத்து ஹோட்டல் தொடங்கியுள்ளார்.
இந்தநிலையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த உணவகத்தின் விளம்பரத்திற்காக இன்று பிற்பகல் போட்டி ஒன்று நடத்தபட்டுள்ளது. அதாவது அரை மணி நேரத்தில் 6 பிரியாணி சாப்பிடும் நபர்களுக்கு 1 லட்சம் பரிசு தொகையும், 4 பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு 50 ஆயிரமும் 3 பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு 25 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனை அறிந்ததும் கோவை மற்றும் கேரளாவில் இருந்து நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் இந்த உணவகத்திற்கு போட்டி போட்டு கொண்டு வந்தனர். இதனால் கோவை ரயில் நிலையம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவறிந்து வந்த ரேஸ்கோர்ஸ் போலீசார், சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.
இதற்கிடையே போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் சாதாரணமாக ஹோட்டலில் கொடுக்கப்படும் ஒரு பிரியாணி அளவை போல், மூன்று மடங்கு இருந்ததால் அதிகம் உண்ண முடியவில்லை என்று குற்றம் சாட்டினர்.
தனது மகனின் மருத்துவ செலவிற்க்காகவும் குடும்ப வறுமையின் காரணமாகவும் இப்போட்டியில் கலந்து கொண்ட கணேச மூர்த்தி என்பவர் இரண்டாம் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-பவானி கார்த்திக்