“வாயில் வித்தை காட்டுவது நம் வேலை அல்ல..” தலைவர் விஜய் அறிக்கை..!!
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டது.., அதற்காக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பொதுச் செயலாளரான என்.ஆனந்த் கட்சியை பதிவு செய்தார். அதை தொடர்ந்து கட்சி தொடங்கி ஒரு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கடந்த மாதம் கட்சியின் கொடியும், கட்சியின் பூவும் வெளியிடப்பட்டு தற்போது இந்த மாதம் 27ம் தேதி முதல் மாநாடும் நடத்தப்படவுள்ளது..
தவெக கொடியில் உள்ள இரண்டு யானைகள் தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை படத்தை தவெக பயன்படுத்தியுள்ளதாகவும் தேர்தல் விதிமுறையை தவெக மீறி செயல்பட்ட தாகவும் குற்றம் சாட்டினர்..
மேலும் தமிழக வெற்றிக் கழகம் கொடியில் உள்ள யானை படத்தை நீக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர். அதாவது தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கொடியை அறிமுகப்படுத்திய 24 மணி நேரத்திலேயே பகுஜன் சமாஜ் கட்சியின் ஆட்சேபனை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது..
அதற்கு இந்திய தேர்தல் ஆணையம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி பதில் கடிதம் அனுப்பியுள்ளது., அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது.., “தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி விவகாரத்தில் தேர்தல் கமிஷன் தலையிடாது. எந்த ஒரு கட்சியின் கொடிக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்குவதோ, அங்கீகாரம் வழங்குவது இல்லை. குறிப்பாக கட்சி கொடிகளில் இடம் பெறும் சின்னங்களுக்கு கூட தேர்தல் ஆணையம் ஒப்புதலோ, அங்கீகாரமோ வழங்காது. தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை., என தெரிவித்தது..
ஆனால் நேற்று மீண்டும் பகுஜன் சமாஜ் கட்சி ஒரு சர்ச்சையை கிளப்பியது அதாவது .., தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை ஒரு வாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என கூறியது .,
இந்நிலையில் அக்கட்சி தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்., அதில் குறிப்பிட்டிருப்பதாவது மாநாட்டுப் பணிகளுக்கான குழுக்களும் தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நம் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவின் ஏற்பாடுகளில் நீங்கள் தீவிரமாக இருப்பதும் எனக்குத் தெரியும்.
அரசியலை, வெற்றி-தோல்விகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அளவிடாமல், ஆழமான அக உணர்வாகவும், கொள்கைக் கொண்டாட்டமாகவும் அணுகப் போகும் நம்முடைய அந்தத் தருணங்கள், மாநாட்டில் மேலும் அழகுற அமையட்டும்.
அரசியல் களத்தில், வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை அன்று. நம்மைப் பொறுத்தவரை, செயல்மொழிதான் நமது அரசியலுக்கான தாய்மொழி. மாநாட்டுக் களப்பணிகளில் மட்டுமல்லாமல், நம் ஒட்டுமொத்த அரசியல் களப்பணிகளிலும் நாம் அரசியல்மயப்படுத்தப்பட்டவர்கள் என்ற ஆழமான எண்ணத்தை மக்கள் மத்தியில் நீங்கள் உண்டாக்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
உற்சாகமும் உண்மையான உணர்வும் தவழும் உங்கள் முகங்களை மாநாட்டில் காணப் போகும் அந்தத் தருணங்களுக்காகவே, என் மனம் தவம் செய்து காத்துக் கிடக்கிறது. இதை நீங்களும் அறிவீர்கள் என்று எனக்குத் தெரியும்…
இந்த நெகிழ்வான நேரத்தில், முக்கியமான ஒரு வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன்.
கழகத் தோழர்கள் எல்லோரையும் போலவே கர்ப்பிணிப் பெண்கள், பள்ளிச் சிறுவர் சிறுமியர், நீண்ட காலமாக உடல்நலமின்றி இருப்பவர்கள். முதியவர்கள் பலரும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து நம் மாநாட்டுக்கு வரத் திட்டமிட்டு இருப்பர். அவர்களின் அந்த ஆவலை நான் மிகவும் மதிக்கிறேன். உங்கள் எல்லோருடனும் அவர்களையும் மாநாட்டில் காண வேண்டும் என்ற ஆவல்தான் எனக்கும் இருக்கிறது.
ஆனால், எல்லாவற்றையும்விட அவர்களின் நலனே எனக்கு மிக மிக முக்கியம். மாநாட்டிற்காக அவர்கள் மேற்கொள்ளும் நீண்ட தூரப் பயணம், அவர்களுக்கு உடல்ரீதியாகச் சிரமத்தை ஏற்படுத்தக் கூடும். அதனால், அவர்கள் இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வர வேண்டாம் என்றே அவர்களின் குடும்ப உறவாகவும் இருக்கும் உரிமையில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஊடக மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக, தங்கள் வீடுகளில் இருந்தே நமது வெற்றிக் கொள்கைத் திருவிழாவில் கலந்து கொள்ளலாம் என்றும் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
மாநாட்டுக்கு வருகின்ற மற்ற அனைவரும், மாநாட்டுக்கு வந்து செல்லும்போது, பாதுகாப்புடன் பயணிப்பது மிக மிக முக்கியம். அதேபோல, பயண வழிகளில் அரசியல் ஒழுங்கையும் நெறிமுறைகளையும் போக்குவரத்து விதிமுறைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
நாம் எதைச் செய்தாலும், அதில் பொறுப்புணர்வுடன் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டையும் காப்போம் என்பதை உணர்த்துமாறு செயல்பட்டால் தான் நம் செயல்கள் மிக நேர்த்தியாக அமையும். அரசியலுக்கும் அது பொருந்தும். நாம் எப்போதும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவே இருக்க வேண்டும். எந்நாளும் இதை ஒரு கட்டுப்பாட்டு விதியாகவே கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வெற்றி நிச்சயம் என இவ்வாறே அவர் பதிவிட்டுள்ளார்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..