பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் வாரிசு மற்றும் துணிவு படங்களின் அதிகாலை காட்சி திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் தயக்கம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான அஜித் நடித்த துணிவு மற்றும் விஜயின் வாரிசு படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளதால் தமிழ் சினிமா ரசிகர்கள் அதற்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில், இரு படங்களின் ட்ரைலர்களும் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் நிலையில் இரு படங்களின் ப்ரோமோஷன் பணிகளும் முழுவதும் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்த இரு படங்களின் முன்பதிவும் சனிக்கிழமை முதல் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சிறிய தியேட்டர் உரிமையாளர்கள் அதிகாலை காட்சி திரையிட தயக்கம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. ஏனெனில், ஒரு ஸ்க்ரீன் இருக்கும் சிறிய தியேட்டர்களில் அதிகாலை காட்சி திரையிடுவதில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஒரு படத்தை வெளியிட்டு இன்னொரு படத்தின் ரசிகர்களை காக்க வைத்தால் அது பெரும் சலசலப்பை ஏற்படுத்த காரணமாக அமையும் என்றும் கூறபடுகிறது. மேலும், தியேட்டர்களில் ஏதேனும் சேதங்கள் ஏற்பட்டால் அது உரிமையாளர்களுக்கு பெரும் பொருட் சேதத்தை ஏற்படுத்தும் என்பதால் ஒரு திரையுடைய திரையரங்க உரிமையாளர்கள் அதிகாலை காட்சியை திரையிட தயக்கம் காட்டி வருவதாக தெரிகிறது.