மணிப்பூர் பிரச்சினை டூ 2026 தேர்தல் வரை…! ஒன்றிய அரசுக்கு எதிரான தீர்மானங்கள்…!!
தேர்தலில் பெரும்பான்மையைப் பறித்து மக்கள் பாடம் புகட்டிய பின்னரும் மக்கள் விரோதப் போக்கைத் தொடரும் ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான தீர்மானங்கள் இன்றைய கழக உயர்நிலைச் செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது..
மேலும் சில அறிக்கைகளை முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்… தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளைப் புறந்தள்ளி இந்தி மாதம் – வாரம் என விழா எடுப்பது, சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்ளாமல் காலந்தாழ்த்துவது, சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிக்கும் வக்ப் வாரிய திருத்தச் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல், தொடர் இரயில் விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்காதது, சமக்ர சிக்ஷா போன்ற திட்டங்களின்கீழ் மாநில அரசுக்கு வர வேண்டிய நிதியை விடுவிக்காமல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைப் பாதிப்புக்குள்ளாக்குவது,
அரசியல் சட்டம் அளித்துள்ள மாநிலங்களுக்கான அதிகாரங்களையும் அபகரிப்பது, அவசர கதியில் கொண்டு வந்த மூன்று குற்றவியல் சட்டங்கள், நிதி ஒதுக்கீட்டில் -பேரிடர் நிதி வழங்குவதில் பா.ஜ.க அல்லாத மாநில அரசுகளிடம் காட்டும் பாராமுகம், நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு நிதி குறைப்பு, இளைஞர்களைத் திண்டாட வைக்கும் 9.2 விழுக்காட்டிற்கு மேலான வேலைவாய்ப்பின்மை, மண்டல் ஆணையப் பரிந்துரையின் அடிப்படையில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டினை ஒன்றிய அரசின் அனைத்துத் துறைகளிலும் முழுமையாகச் செயல்படுத்தாமல் இருப்பது உள்ளிட்ட சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கைகளுக்குக் கண்டனங்கள்.
- 2014 தேர்தலுக்கு முன்னதாகக் கொடுத்த எந்த வாக்குறுதியையும் பத்தாண்டுகளாக நிறைவேற்றாமல் – அதற்கான எந்த முன்முயற்சியும் எடுக்காமல் மந்த நிலைமையில் ஒன்றிய அரசு இருக்கிறது.
- இந்தியாவின் அனைத்துத் தர மக்களுக்கும் குறைந்தபட்ச நன்மைகளைச் செய்யும் செயல்களை மூன்றாவது முறை மக்களால் தனிப் பெரும்பான்மை வழங்கப்படாத தேர்தல் முடிவுகளுக்குப் பின்னராவது செய்ய வேண்டும்…
மீனவர்கள் நலன்களைக் காப்பீர் :
தமிழ்நாட்டு மீனவர்கள் கைது, படகு பறிமுதல், அபரிமிதமான அபராதத் தொகை, சிறைத் தண்டனை, மீனவர்கள்மீது தாக்குதல் ஆகியவை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையிலும், மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டிடும் வகையிலும் இலங்கைத் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வைப் பெறவும் இலங்கையில் அமைந்துள்ள புதிய அரசிடம் இப்போதாவது ஒன்றிய பா.ஜ.க. அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
கடந்த 18 மாதங்களாக மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது. போராட்டம், வன்முறை, தீ வைப்பு, அப்பாவிக் குழந்தைகள், பெண்கள் ஈவு இரக்கமின்றி கொலை செய்யப்படுவது என மனித நடமாட்டமே அற்றுப் போகுமளவிற்கு அராஜகத்தின் உச்சத்தில் பாதிக்கப்பட்டு இருக்கும் மணிப்பூர் மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசும், ஒன்றிய பா.ஜ.க. அரசும் கை கழுவிவிட்டதாகவே தெரிகிறது.
இனியும் வேடிக்கை பார்க்காமல் – மணிப்பூர் மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்து – மனிதநேயம் உயிர்பெற ஒன்றிய பா.ஜ.க. அரசு – குறிப்பாக, பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தனிக்கவனம் செலுத்திட வேண்டும்.
மாநிலங்களின் அதிகாரத்திற்காகக் குரல் கொடுத்த முதல் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். அந்த வழியில் நின்று தற்போது 16-ஆவது நிதிக் குழுவிடம் மாநில நிதி உரிமைக்காக ஆட்சி சார்பிலும், கட்சி சார்பிலும் வலுவான வாதங்களை எடுத்துவைத்துள்ளது.
16-ஆவது நிதிக்குழுவின் தலைவர் – தமிழ்நாடு அரசின் சார்பில் Masterclass Presentation செய்யப்பட்டிருக்கிறது எனப் பாராட்டியிருப்பதைப் பெருமிதத்துடன் இந்தக் கூட்டம் பதிவு செய்கிறது. மாண்புமிகு முதலமைச்சரின் கோரிக்கைகளை வழிமொழிந்த அனைத்துக் கட்சிகளுக்கும் இந்தக் கூட்டம் நன்றி செலுத்துகிறது.
தமிழ்நாட்டின் கோரிக்கைகள் 16-ஆவது நிதிக்குழுவின் அறிக்கையில் முழுமையாக இடம்பெற வேண்டும். அதனை ஒன்றிய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராவோம்..
தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியும், சொல்லாத பல திட்டங்களை நிறைவேற்றியும் வளமான தமிழ்நாட்டைக் கழக அரசு உருவாக்கி வருகிறது. பயனடைந்தவர் சொல்லும் பாராட்டும், பயனாளிகளின் மனநிறைவும் சேர்ந்து 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. ஆட்சியை மீண்டும் மலர வைக்கும் என்பதில் அய்யமில்லை.
இந்நிலையில் கழக அரசின் சாதனைகள் – திட்டங்கள் – மாண்புமிகு முதலமைச்சரின் அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாடுகள் தொலைநோக்குப் பார்வைகள் அனைத்தையும் மக்களுக்கு நினைவூட்டுவதன் மூலம் – கழகத்தின் ஒவ்வொரு உடன்பிறப்பும், ஒரு இயக்கம் என்று சொல்லத்தக்க வகையில் இன்று முதல் தேர்தல் பரப்புரைப் பணிகளைத் தொடங்குங்கள் எனவும் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..