“மழை நீர்” அந்த காலம் முதல் இந்த காலம் வரை..!
வரலாறு காணாத மழை……….
வரலாறு காணாத மழை……….
அப்படின்னு ஒவ்வொரு ஊடகத்திலும்… ஒவ்வொரு செய்தித்தாளிலும்… போட்டுட்டே இருக்காங்க.
வரலாறு காணாத மழைனா என்னனு எனக்கு தெரியல.
எனக்கு விவரம் தெரிந்து, சாரல் மழை சீசன்ல, எங்க பாட்டி அதாவது எங்களோட அப்பாம்மா என்ன பண்ணுவாங்கன்னா, எங்க வீட்டுக்கு வந்து ஒரு வாரத்திற்கு மேல் தங்கி இருந்து, ஒரு மாதத்திற்கு சாப்பாட்டிற்கு தேவையான அரிசியை தயார் செய்வதற்காக
நெல் அவித்து, அதை காய வைத்து, அதை அரைத்து வரும் வரை காத்திருந்து அந்த பணியை முடித்து தான் செல்வார்கள்.
அதேபோல், கால மழை நேரத்திலும் இது தொடரும். கால மழை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து நம்முடைய சாலை ஓரங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். (மழைநீருக்கான ஓடை ஒவ்வொரு சாலை ஓரங்களிலும் இருந்தது) இதில் பல நாட்கள் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும். சின்ன ஓடையில் இருந்து பெரிய ஓடையில் தண்ணீர் சேரும். பெரிய ஓடையில் இருந்து கால்வாய்க்கு தண்ணீர் செல்லும்
இது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், மீன்கள் சாலைகளுக்கு வருவதுண்டு. ஓடையில் தூண்டிலிட்டு மீன்பிடித்த அனுபவம் எனக்கு உண்டு.
மேலும் மழை நேரங்களில் அதாவது காலமழை, சாரல் மழை வேளைகளில், ஈரப்பதங்கள் அதிகமாகி, அதிகமான பேருக்கு காலில்
#நீர்_கடி என்ற ஒரு நோய் வரும். இப்போது யாருக்குமே இது வரவில்லை காரணம் அதற்கான மழை இல்லை.
அந்த அளவிற்கு 20 நாட்கள் முதல் 30 நாட்கள் தொடர்ந்து மழை பெய்யும்.
அந்த காலத்தில் அனைவரின் வீட்டிலும் விறகு அடுப்பு தான். மழை நேரத்தில் தீயை பற்ற வைப்பதற்கு வெகு நேரம் ஆகிவிடும். (ஈரப்பதத்தில் இருக்கும் விறகு சரியாக எறியாமல், பலரின் வீட்டின் மேல் புகை மூட்டம் காணப்படும்) அதற்காக சமையல் செய்து முடித்தவுடன், விறகுகளை அடுப்பு மீது அடுக்கி வைத்து விடுவார்கள். அந்த வெக்கையில் அந்த விறகுகள் காய்ந்து மறுநாள் சமையலுக்கு எளிதாக இருக்கும் என்பதற்காக அந்த விறகுகளை அடுப்பில் காய வைப்பார்கள். ஏனென்றால் தொடர்ந்து மழை பெய்து கொண்டு இருப்பதால் விறகுகள் கூட காயாது.
அப்படி தொடர் மழை பெய்து கொண்டிருந்த காலத்தில் எங்குமே வெள்ளம் வந்ததில்லை. பலமுறை எங்கள் பகுதியில் உள்ள கீழப்பாவூர் குளத்திற்கு வரும் காய்வாயிலும், குளத்திலும், தண்ணீர் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது போல் இருக்கும். அதாவது தண்ணீர் இரண்டு பக்கமும் ததும்பி நிற்கும். ஆனால் எங்கும் உடைந்ததில்லை. எந்த ஊருக்குள்ளும் வெள்ளம் சென்றது இல்லை.
கால்வாய் வழியாக குளத்திற்கு செல்லும், குளத்திலிருந்து ஒவ்வொரு சிறு குளங்களுக்கும் மறுகால் செல்லும், அது போக வீணான நீர் ஆற்றிற்கு செல்லும், ஆற்றில் இருந்து கடலுக்கு செல்லும். இது தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கும்.
அதற்கான பாதைகள் (ஓடைகள்,கால்வாய்கள்) தெளிவாக இருந்தது.
ஆனால் இப்போது அந்த வழித்தடங்கள் எங்கே?
இப்போது ஒரு நாள் மழைக்கு எந்த ஊரும் தாங்கவில்லை. சென்னை மட்டுமல்ல, சென்னையில் தொடங்கி, விழுப்புரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, மதுரை, கன்னியாகுமரி, திருச்சி என அனைத்து ஊர்களிலும் ஒரு நாள் மழை பெய்தாலே ஊருக்குள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
சாலைகள் முழுவதும் ஆறுகளாக காட்சி அளிக்கிறது. இதற்கான காரணத்தை அரசியல்வாதிகள் தெரிந்தும் தெரியாமல் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும், அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
ஏன் தண்ணீர் குடியிருப்பு பகுதிக்குள் வருகிறது?
ஏன் தண்ணீர் சாலைகளில் சென்று கொண்டிருக்கிறது?
சிறிய மழைக்கும் தண்ணீர் ஊருக்குள் புகுவதற்கான காரணம் என்ன?
என்பதை அறியவில்லையா? அல்லது அறியாதது போல் நடித்துக் கொண்டிருக்கிறார்களா? என்பதே புரியவில்லை.
எடுத்துக்காட்டிற்கு எங்கள் ஊரின் தென்பகுதியில்,
பல ஓடைகள் இருந்தது ஆனால் இன்று இல்லை. ஒவ்வொரு இடங்களிலும் உள்ள ஓடைகள் மறைக்க பட்டுள்ளது.
பல இடங்களில் பஞ்சாயத்து நிர்வாகமே, ஓடைகளையும், ஊரணிகளையும், குப்பைகளால் மூடிக்கொண்டு இருக்கிறது.
மக்கள் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். அதுபோல் சிறு சிறு ஓடைகளையும் அப்படியே மறைத்து விட்டனர். தண்ணீர் செல்வதற்கு வழி இல்லாமல் பல வழித்தடங்கள் அடைக்கப்பட்டுள்ளது.
பல கார்ப்பரேட் கம்பெனிகள் நீர்த்தடங்களில் கட்டிடங்களை கட்டி நீர் திசை மாறி செல்வதற்கு காரணமாக உள்ளனர்.
எனவே அரசு கார்ப்பரேட் கம்பெனிகள் என்று பாராமல், தனக்கு தேவையானவர்கள் என்று பாராமல்,
நீர் நிலைகளிலும்,
நீர் செல்லும் பாதையிலும்,
அரசு புறம்போக்கிலும், கட்டியுள்ள கட்டடங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தால் தான், ஊருக்குள், நகருக்குள், வாழும் பகுதிக்குள், வெள்ளம் புகுந்து செல்வதை தடுக்க முடியும்.
இதையெல்லாம் விட்டுவிட்டு 4000 கோடி செலவு செய்தோம், தற்காலிக வெள்ள நிவாரணத்துக்கு 2000 கோடி செலவு செய்தோம்,
தண்ணீர் தேங்கி எங்குமே நிற்கவில்லை, மழை நின்றவுடன் தண்ணீர் வடிந்துவிட்டது அப்படின்னு பொய்யான பேட்டியை முதலமைச்சரும், அமைச்சர்களும், கொடுப்பதை தவிர்த்து விட்டு, ஆக வேண்டிய பணியை செய்வது நல்லது.
மழை நின்றவுடன் தண்ணீர் வடிந்து விட்டது என்றால் பாதிப்பு இல்லை என்பது அர்த்தம். அப்படி பாதிப்பில்லாமல் இருக்கும்போது, எதற்காக மத்திய அரசிடம் எங்களுக்கு 6000 கோடி வேண்டும், 10000 கோடி வேண்டும் என்று கேட்க வேண்டும்?
எனவே மாநில அரசும், அமைச்சர்களும், ஊடகங்களும், செய்தித்தாள்களும், பொய்யான விளக்கத்தை மக்களுக்கு அளித்து வருகிறது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.