2023 ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் இறுதி நாளான இன்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரையுடன் நிறைவு பெறுகிறது. அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள பதிலுரையில், கடந்த 9 ஆம் தேதியன்று ஆளுநர் இந்த மன்றத்தில் 2023 -2024 ஆம் ஆண்டின் தொடக்கத்துக்கான தொடக்க உரையை ஆற்றினார்.
அப்போது தமிழ்நாடு அரசின் பண்புகள் கூறுகளை விளக்கியும் தமிழ்நாடு அரசு எந்த வகையில் எல்லாம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பதையும் பாராட்டியும், எதிர்காலத்தில் செயல்படுத்த இருக்கக்கூடிய முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்து சுருக்கமாக அறிவித்தும் தனது உரையை இந்த மன்றத்தில் ஆற்றினார். மேலும் அன்று நிகழ்ந்த சம்பவத்தை மீண்டும் பேசி தாம் அரசியலாக்க விரும்பவில்லை எனவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், கழக அரசு 20 மாதங்களை கடந்து இமாலய சாதனையை செய்திருப்பதாகவும், தம்முடைய ஆட்சி கடந்துள்ள காலம் குறைவு என்றாலும், ஆட்சியில் செய்த பணிகள் அதிகம் என குறிப்பிட்டு பேசினார். மேலும், சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று இன உரிமை மாநில சுயாட்சி ஆகிய தத்துவங்கள் அடித்தளத்தில் எழுப்பப்பட்ட பல வாய்ந்த இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம் என பேசிய முதலமைச்சர், உரையாற்றிய ஆளுநருக்கு சட்டமன்றம் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.