ஆப்கானிஸ்தானில், கல்வி கற்க, பூங்கா – உடற்பயிற்சிக் கூடங்கள் செல்ல, தொண்டு நிறுவனங்களில் பணியாற்ற என தொடர்ந்து பெண்களுக்கான உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும்நிலையில், பொது விவகாரங்கள் மற்றும் தலிபான் புகார்களைக் கேட்கும் இயக்குநரகம் ஒரு புதிய ஆணையை அறிவித்துள்ளது.
அதில், ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத்தில் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவதற்கு பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், பெண்கள் பெண் மருத்துவர்களிடம் மட்டுமே செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்டு வரும் நிலையில், இனி வரும் காலங்களில் பெண் மருத்துவர்களும் இல்லாமல் போகும் சூழல் உருவாகும் என்றும், அப்போது பெண்கள் யாரிடம் செல்ல முடியும் எனவும் பல தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.