அழகர் கோவில் கள்ளழகர் திருக்கல்யாணம்…!!
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் அமைத்துள்ள அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் பங்குனி பெருவிழா திருக்கல்யாண வைபவம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
108 வைணவ திருத்தலங்களில் ஒன்றானதும் திருமாலிருஞ்சோலை. தென் திருப்பதி. என்று போற்றப்படுவதுமான மதுரை கள்ளழகர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சிறப்பு பெற்ற விழாக்களில் பங்குனி மாதம் நடைபெறும் திருக்கல்யாண உற்சவம் தனி சிறப்புடையது ஆகும்.
அந்த வகையில் கடந்த 8-ம்தேதி பங்குனி பெருவிழா தொடங்கியதையடுத்து தினமும் அருள்மிகு கள்ளழகர் ஸ்ரீதேவி, பூமிதேவி தாயார்களுடன் பல்லக்கில் புறப்பாடாகி கோவிலுக்குள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தார்..
இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி பெருவிழா திருக்கல்யாண வைபவம் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
முன்னதாக சுந்தரராஜா பெருமாள் சகல பரிவாரங்களுடன் ஆஸ்தானத்தைவிட்டு புறப்பாடாகி தோளுக்கினியனில் அலங்காரமாகி திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்.
தொடர்ந்து வேதமந்திரங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்கிட அருள்மிகு சுந்தரராஜா பெருமாளுக்கும், அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி. ஸ்ரீகல்யாண சுந்தரவல்லி தாயார் மற்றும் ஸ்ரீஆண்டாள் ஆகிய நான்கு பிராட்டிமார்களுடனும் ஸ்ரீபெரியாழ்வார் முன்னிலையில் திருக்கல்யாண வைபவமும் தொடர்ந்து விசே பூஜைகள் தீபாராதனைகள் சிறப்பாக நடைபெற்றது.
கள்ளழகர் பெருமாள், ஒரே நேரத்தில் ஸ்ரீதேவி, பூமிதேவி, கல்யாணசுந்தரவல்லி தாயார், ஆண்டாளை ஸ்ரீபெரியாழ்வார். முன்னிலையில் நடக்கும் திருமணத்தின்போது மட்டுமே ஆறு மூர்த்திகளையும் ஒரே இடத்தில் காணமுடியும் என்பதால் பக்தர்கள் ஏராளமானோர் இன்று அழகர்கோவிலுக்கு வந்திருந்து திருக்கல்யாண வைபத்தை தரிசனம் செய்தனர்.