அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய ஒருவரைக் கைது செய்ய விடாமல் தடுத்ததாக அமெரிக்க நீதிபதி ஒருவரையே எஃப்.பி.ஐ கைது செய்துள்ளது.
அமெரிக்க அதிபரான டிரம்ப் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை நாடு கடத்தக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவர் அதிபராகப் பதவியேற்றது முதல் பலர் நாடுகடத்தப்பட்டுள்ளனர். இந்தியர்களும் நாடு கடத்தப்பட்டுள்ளனர். டிரம்ப்பின் இந்த நடவடிக்கைக்கு உள்நாட்டிலும் கடும் எதிர்ப்பு உள்ளது. எனினும், டிரம்ப் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.
இந்த நிலையில், மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவரை கைது செய்ய விடாமல் தடுத்ததாக மில்வாக்கி நீதிபதி ஹன்னா டுகன் நேற்று ( ஏப்ரல் 25)கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கில் ஆஜராக வந்த எடுவாரா என்ற அந்த நபரை கைது செய்ய நீதிமன்றத்துக்கு குடியேற்ற அதிகாரிகள் வந்துள்ளனர். அப்போது, கைது நடவடிக்கைக்கு நீதிபதி எதிரிப்பு தெரிவித்துள்ளார். தொடர்ந்து, ஹன்னா டுகன் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது குறித்து எப்.பி.ஐ இயக்குநர் காஷ் படேல் தன் எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
ஒருவரைக் கைது செய்யவிடாமல் தடுப்பது மற்றும் தப்பிக்க உதவுவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் டூகன் மீது வைக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றங்களுக்காக அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
அதே போல நியூமெக்சிகோவில் வெனிசூலாவை சேர்ந்த சட்டவிரோதமாக குடியேறியவருககு அடைக்கலம் கொடுத்ததாக முன்னாள் நீதிபதியும் அவரின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அதிரடி நடவடிக்கை பாயும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.