நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்தின் பெயரை வைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருபவர் நடிகர் மீசை ராஜேந்திரன். சமீபத்தில் மீசை ராஜேந்திரன் தேனி குஞ்சரம்மாள் குறித்து சொன்ன தகவல் பலரையும் உருக வைத்துள்ளது. மீசை ராஜேந்திரனின் அந்த பேட்டியை தான் தேமுதிகவினர் மீண்டும் இணையத்தில் ஷேர் செய்து கொண்டுள்ளனர்.
மீசை ராஜேந்திரன் கூறியதாவது, ‘ஒரு முறை விஜயகாந்த் என்னிடம், இன்று உங்களுக்கு ஷூட்டிங் இருக்கா? என்று கேட்டார். அதற்கு நான், இல்லை என்று சொன்னேன். பிறகு, “தேனி குஞ்சரம்மாள தெரியுமா?” என்று கேட்டார். தெரியும் என்று பதில் சொன்னேன். உடனே, பை நிறைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து , தேனி குஞ்சரம்மாள் இறந்துவிட்டார். அவருடைய மகள் சாந்தி என்பவர், அடக்கம் செய்யக்கூட பணம் இல்லை என்று எனக்கு போன் செய்தார். நீ உடனடியாக இந்த பணத்தை எடுத்துக்கொண்டு போய், சாந்தியை விசாரித்து கொடுத்து விடு என்று சொன்னார். என்னுடைய இரங்கலையும் கூறி விடு என்று பணத்தை கொடுத்தார். வேறு ஏதாவது உதவி வேண்டுமென்றாலும் எனக்கு போன் செய்யவும் என்றும் அவரிடத்தில் சொல்ல சொன்னார்.
இப்படி ஒரு மனிதரை சினிமாவிலும் பார்க்கவில்லை. அரசியலிலும் பார்க்கவில்லை. உதவி என்று கேட்டால் தயங்காமல் உதவி செய்பவர்தான் நம்ம கேப்டன். எந்த வேறுபாடும் பார்க்காமல் அனைவருக்கும் உதவுவார் என்று மீசை ராஜேந்திரன் சொன்னார்.