“ஜீவசமாதி அடைய ஆசை..” தனக்குத் தானே கல்லறை கட்டிய சாமியார்..!!
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் தாலு காலத்தேரி அருகே செஞ்சி கிராமத்தில் வசித்து வந்தவர் கோவிந்தசாமி (வயது 98) இவருக்கு ராணியம்மாள் என்கின்ற மனைவியும், 4 மகன்கள் மற்றும் ஒரு மகளும் உள்ளனர்.
நிலச்சுவான் தாரராக இருந்த இவர் வயது முதிர்ந்த தருவாயில் யோகா, உடற்பயிற்சி, சித்த மருத்துவ முறை போன்றவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள ஆரம்பித்தார். தொடர்ந்து இயற்கை மருத்துவத்தில் ஆர்வம் கொண்ட இவர் இயற்கை மூலிகைகளை வைத்து பல்வேறு வியாதிகளுக்கு மருந்து தயாரித்து வழங்கி வந்தார். இதனால் அப்பகுதியில் பிரபலம் அடைந்து சாமியார் என்று அழைக்கப்பட்டார்.
செஞ்சி சாமியாராக மாறிய கோவிந்தசாமி, 17 ஆண்டுகளுக்கு முன்பு தன் உடலை அடக்கம் செய்வதற்காக தனக்கு சொந்தமான நிலத்தில் கோயில் போன்ற அமைப்புடன் கூடிய சமாதி ஒன்றை கட்டி வைத்துள்ளார். கோவிந்தசாமியின் பிள்ளைகள் தன் தந்தையார் மீது அதிகம் பாசம் வைத்திருந்ததால் இதற்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
ஜீவசமாதி அடைய ஆசைப்பட்ட அவருக்கு அரசு அனுமதி இல்லை என்பதை அறிந்தவுடன் தன் நான்கு பிள்ளைகளை அழைத்து தான் இறந்தவுடன் உடனடியாக தன் உடலை தான் கட்டி வைத்திருக்கும் சமாதிக்குள் தன் உடலை வைத்து வழக்கம்போல் எல்லாருக்கும் மண்ணைத் தள்ளி மூடுவது போல் மூடாமல் கற்பூரம் திருநீறு வில்வ இலை உள்ளிட்ட பல்வேறு மூலிகை பொருட்களை வைத்து அடக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அதன் அடிப்படையில் 98 வயது கடந்த நிலையில் நான்கு நாட்களுக்கு முன்பு உடல்நிலை குறைந்து இறக்கும் தருவாயில் இருந்த அவர் தன் பிள்ளைகளை அழைத்து தன் அடக்கம் குறித்த செய்தியை கூறிவிட்டு யாருடனும் பேசாமல் உண்பதற்கு எந்த ஆகாரமும் எடுத்துக் கொள்ளாமல் மௌன விரதம் இருக்க ஆரம்பித்தார்.
இதனை தொடர்ந்து நேற்று இரவு 10 மணி அளவில் அவர் உடலை விட்டு அவரது உயிர் பிரிந்தது. ஒரு நாள் மட்டும் அவரது உறவினர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், சிவ ஆச்சாரியார்கள் பூஜை செய்து சிவன் குறித்த பாடல்கள் பாடி இந்து முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.
தனக்குத்தானே கல்லறை கட்டி வைத்து அதே சமாதியில் தன்னை புதைத்துக் கொண்ட இயற்கை மருத்துவர் கோவிந்தசாமியின் இறப்பும் இழப்பும் உறவினர்களிடையேயும் அப்பகுதி மக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.