நாங்குநேரியில் நேற்று நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உட்பட7 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் இருந்து நேற்று காலை நாகர்கோவில் நோக்கிச் சென்ற இன்னோவா காரை மாரியப்பன் என்பவர் ஓட்டியுள்ளார். 140 கி.,மீ வேகத்தில் சென்ற இன்னோவா கார் நாங்குநேரி அருகே தளபதிசமுத்திரம் அருகே கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனைக் கடந்து திருநெல்வேலி நோக்கிச் சென்ற மற்றொரு கார் மீது மோதியது. விபத்தில் இரண்டு வாகனங்களும் பலத்த சேதமடைந்தன.
இந்த விபத்தில் காரில் இருந்த கட்டட காண்டிரக்டர் தனிஸ்லாஸ் (65), அவரது மனைவி மார்க்ரட் மேரி (60), அவரது மகன் ஜோபர் (40), அவரது மனைவி அமுதா (35), பேரன் ஜோகன் (1), பேத்தி ஜோகனா (7) ஆகிய அனைவரும் உயிரிழந்தனர். தனிஷ்லாஸின் மற்றொரு பேத்தியான ஜோபினா (7) உயிருக்கு ஆபத்தான நிலையில் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நாங்குநேரி டி.எஸ்.பி பிரசன்னகுமார் அவரது மனைவி ஆகியோரும் விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். இவர்கள் இருவருமே டாக்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்தில் பலியான ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகேயுள்ள மயிலோடு கிராமத்தை சேர்ந்தவர்கள். தனிஷ்லாஸின் குடும்பத்தினர் பலியானததையடுத்து, அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. முன்னதாக, விபத்தில் பலியானவர்களின் உடல்கள் மயிலோடு கிராமத்திலுள்ள ஆலயத்தில் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான கிராம மக்கள் அவர்களுக்கு அஞ்சவி செலுத்தினர். பின்னர் , அவர்களின் சடலங்கள் தனிஷ்லாசுக்கு சொந்தமான தோட்டத்தில் அருகருகே புதைக்கப்பட்டன. இறுதி சடங்கில் கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த் கலந்து கொண்டு உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இன்னோவா காரை 140 கி.மீ வேகத்தில் ஓட்டி சென்றதே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதிவேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த இன்னோவா கார் சென்டர் மீடியனை தாண்டி சென்று இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளது.