பெங்களூர் வியாபாரி கொலை..!! சிக்கிய 7 பேர்..!! பின்னணியில் வெளிவந்த ஷாக்..!!
தேனியில் கடத்தப்பட்ட பெங்களூருவைச் சேர்ந்த கண்ணாடி வியாபாரியை கொலை செய்து புதைத்த கும்பல்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு மடுவாலா பகுதியைச் சேர்ந்தவர் திலீப் (40).இவர் வீடுகளில் அலங்காரத்திற்கு வைக்கும் கண்ணாடி பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.
இவரும் இவருடைய சகோதரி ராதா என்பவரின் மகன் கலுவா (37) என்பவரும் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதிகளில் தங்கி இருந்து கண்ணாடி பொருட்கள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்களுக்கு தேனியைச் சேர்ந்த மோகன் என்பவர் ஏற்கனவே அறிமுகம் ஆகி இருந்தார்.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி பிற்பகல் 1.30 மணியளவில் திலீப்,கலுவா ஆகிய இருவரையும் தேனி புதிய பேருந்து நிலையம் வரும்படி மோகன் கூறியுள்ளார். அதன் பேரில் தேனி பேருந்து நிலையம் வந்த இருவரையும் தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு தேனி புறவழிச் சாலை பகுதிக்கு அழைத்துச் சென்றார். அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் அவர்கள் இருவரையும் கடத்திச் சென்றுள்ளனர்.
பின்னர் தென்னந்தோப்பில் வைத்து, வெளிமாநிலத்தில் இருந்து இங்கே வந்து, போலி நகைகள் விற்பனை செய்து, மக்களை ஏமாற்றுகிறாய எனக்கூறி அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். அதில் கலுவா மயக்கமடைந்த நிலையில் அவரை மட்டும் அங்கேயே விட்டுவிட்டு திலீப்பை மட்டும் அந்த மர்ம நபர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.
பின்னர் மயக்கத்தில் இருந்து விழித்த கலுவா, தனது தாய் நிர்மலாவிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இதனை அடுத்து அவர்கள் இருவரும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகார் மீதான விசாரணை தேனி நகர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
இதனை அடுத்து வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முகேஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இந்தக் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட ஜெயக்குமார், முருகன், ஆகாஷ், முத்துப்பாண்டி, சதீஷ் குமார், மற்றும் சௌமியன் ஆகிய ஏழு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கலுவா மற்றும் திலீப் ஆகியோர் தங்க நகைகள் என்று கூறி போலி நகைகளை ஆண்டிபட்டியைச் சேர்ந்த மோகன் என்பவருக்கு விற்பனை செய்துள்ளனர். இதனால் முகேஷ் என்பவருடன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவருக்கும் இடையேயான முன் விரோதமே கொலைக்கு காரணம் என போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் திலீப்பை அடித்து கொலை செய்து பின்னத்தேவன்பட்டி அருகே உள்ள சர்க்கரைபட்டி என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் புதைத்ததாக தகவல் தெரிவித்தனர். அதனை அடுத்து தேனி வட்டாட்சியர், வருவாய் துறையினர் முன்னிலையில் போலீசார், புதைக்கப்பட்ட திலீப்பின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்து, அவரது உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தனர்.
பெங்களூருவைச் சேர்ந்த நபரை தேனியைச் சேர்ந்த நபர்கள் கடத்தி அடித்து கொலை செய்து புதைத்த சம்பவம் தேனி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.